×

அதிமுகவுடன் கூட்டணிக்கு வர 20 சீட், ரூ.100 கோடி கேட்கிறார்கள்: களஆய்வு கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் திடுக் தகவல்

திருச்சி: அதிமுகவுடன் கூட்டணிக்கு வர ரூ.100 கோடி, 20 சீட் கேட்பதாக திருச்சியில் நேற்று நடந்த களஆய்வு கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார். அதிமுக சார்பில் கட்சியின் வளர்ச்சி குறித்து தமிழகம் முழுவதும் கள ஆய்வு கூட்டம் நடந்து வருகிறது. திருச்சியில் மாநகர் மாவட்ட சார்பில் கள ஆய்வுக்கூட்டம் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்களான பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், அமைப்பு செயலாளர்கள் தங்கமணி, கோகுல இந்திரா ஆகியோர் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.

கூட்டத்தில் தங்கமணி பேசியதாவது: கடந்த 2 தேர்தல்களில் ஏன் இந்த தொகுதிகளில் தொய்வு ஏற்பட்டது என்பதை நிர்வாகிகள் மனசாட்சியின்படி ஆய்வு செய்ய வேண்டும். இதே நிலை நீடித்தால் நாம் பல சங்கடங்களை சந்திக்க வேண்டியிருக்கும். எந்த தேர்தலாக இருந்தாலும் பலர் போட்டிபோட்டு சீட் கேட்டாலும் யாராவது ஒருவருக்கு தான் கிடைக்கும். அப்படி தனக்கு சீட் கிடைக்கவில்லையென்றால் கட்சி பணியில் இருந்து ஒதுங்கி கொள்கிறார்கள். வரும் காலத்தில் இதை சரி செய்ய வேண்டும்.

நமக்கு எப்போதும் இரட்டை இலை தான். ஒவ்வொரு மாவட்டத்திலும் வெற்றிபெற்று சென்றால் தான் எடப்பாடியை முதல்வராக்க முடியும். ஏதோ நாம் வந்தோம் மேடையை போட்டோம் எடப்பாடியை முதலவராக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டோம் என்று முழங்கிவிட்டு சென்றால் எந்த பிரயோஜனமும் இல்லை. களப்பணி என்பது அவசியம். அது இல்லை என்றால் நாம் இந்த மாவட்டத்தை மீட்டெடுக்க முடியாது. உழைத்தால் தான் இயக்கம் வளரும். நாம் உழைக்க வேண்டும்.

துரோகத்தினால் இயக்கம் வளரும் என்று நினைத்தால் அவர்கள் தான் அழிந்து போவார்கள். எனவே உழைக்க தயாராகுங்கள். அடுத்த வாய்ப்பிற்காக காத்திருங்கள், உங்களுக்கான வாய்ப்பும் கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார். திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது: யாரும் உங்களுக்கு தெரியாத கருத்துகளை கூற இங்கு வரவில்லை. எல்லாம் உங்களுக்கு தெரிந்தது தான், மிக தௌிவாக தங்கமணி குறிப்பிட்டிருந்தார். எடப்பாடி இன்று 75 எம்.எல்.ஏக்களுடன் எதிர்க்கட்சி தலைவராக உள்ளார்.

அடுத்து நாம் வெற்றி பெற வேண்டும் என்றால் கூட்டணி தான். போகும் இடமெல்லாம் எடப்பாடியாரிடம் கூட்டணி குறித்து சொல்லுங்கள் என்று சொல்கிறார்கள். அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கிறார். நாங்கள் எல்லாரும் அங்கே அமர்ந்து இருந்தோம். ஆனால் இங்கு ஒரு சிலர், அடுத்து முதலமைச்சர் யார் ஆகலாம் என்று திட்டம் போடுகிறார்கள். ஓபிஎஸ்சை ராஜினாமா செய்ய சொல்லி ஜெயலலிதா கடிதம் எழுதி வாங்கினார்.

ஆனால் அவர் சொல்கிறார், எங்களுக்கு துரோகம் செய்த எடப்பாடி என்று. அவருக்கு துரோகம் செய்தது டிடிவி, இந்த கட்சியை ஒன்றாக்க வேண்டும் என்று எடப்பாடி கூறுகிறார். ஆனால் டிடிவி போகும் இடமெல்லாம் எடப்பாடி கட்சியை விரைவில் மூடுவிழா செய்து விடுவார் என்று கூறுகிறார். யாருங்க சொல்றது கட்சிக்கு உழைத்தவன், தியாகம் செய்தவன், ரத்தம் சிந்தினவன் சொன்னா காலில் விழுந்து ஏற்றுக்கொள்ளலாம். நாங்கள் தப்பு செய்து விட்டோம் என்று. இவங்கல்லாம் நம்மள பத்தி பேசுறாங்க.

சசிகலா அம்மா அந்த வீட்டுக்கு வேலைக்கு வந்தவுங்க, இன்று அவர் ஆயிரம் கோடீஸ்வரர்களை உருவாக்கி விட்டார். எப்போதுமே கட்சி எங்களுக்கு தான், பொது செயலாளர் நாங்க தான், முதலமைச்சர் நாங்கள் தான் என்று சொல்லிக்கொண்டே பலர் இருக்கிறார்கள். அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்பது இன்று நடந்து வருகிறது. இந்த கூட்டத்திற்கு வரும்போதே பேட்டி கொடுத்து கூட்டணியை கெடுத்துவிடாதீர்கள் என்று எடப்பாடியார் கூறினார்.

நீங்க பேட்டியில் யாரையாவது திட்டிவிடுவீர்கள், அவர்கள் கோபித்துகொள்வார்கள். அதனால பாத்து பேசுங்கனு அவர் கையெடுத்து கும்பிட்டார். அதனால நாங்கள் டிவி காரங்ககிட்ட பேசுறதில்லை. இப்போ வரும்போது கூட மைக்க நீட்டுனாங்க. நாங்க வணக்கம் அய்யா, வணக்கம் அய்யா என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். அவங்களுக்கு ஏதாவது பரபரப்பா தேவை செய்தி சொல்லணும். அதிமுகவிற்கு கூட்டணிக்கு வருகிறவர்கள் எல்லாரும் ஒரு 20 சீட்டும், ரூ.50 முதல் ரூ.100 கோடி கொடுங்க என்று கேட்கிறார்கள்.

ஏதோ எள்ளு, அரிசி கேட்பதை போல் கேட்கிறார்கள். நாம எங்க போறது அதுக்கு. தேர்தலில் நிற்பது எவ்வளவு கஷ்டம்னு இங்குள்ள எல்லாருக்கும் தெரியும். ஆனா, வேட்பாளர் எவ்வளவு வச்சுருக்காரு, எவ்வளவு நீங்க கொடுத்தீங்க என்று தான் கேட்கிறார்களே தவிர என்னயா பண்றீங்கனு கேட்டா பதில் சொல்ல மாட்டேங்குறாங்க. அதனால் தான் கள ஆய்வு செய்வதற்காக எங்களை நியமித்துள்ளனர். இங்க அமைச்சர்கள் எல்லாரும் இருக்காங்க, மாவட்ட செயலாளர்கள் இருக்கீங்க உங்ககிட்ட நாங்க கணக்கு கேட்டா நீங்க எங்ககிட்ட கணக்கு கேட்பீர்கள். ஒரு பூத்துக்கு 100 ஓட்டுக்கு ஒருவர் வாக்காளர்களை கவனியுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.

* ஓபிஎஸ் முதல்வராக தங்கமணி நாடகம்: மேடையிலேயே போட்டு கொடுத்த உளறல் மன்னன்
திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், ‘அன்று சசிகலா தான் அடுத்த முதல்வர் என்று செய்தி பரப்பப்படுகிறது. ஆனால் பெங்களுரூரில் இருந்து செய்தி வருகிறது. 4 ஆண்டுகால சிறை என்று ஜெயிலுக்கு செல்கிறார். அந்த இடத்தில் எடப்பாடியார் முதல்வராக வேண்டும் என்று கடவுள் உத்தரவு போடுகிறார். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் உத்தரவு போடுகிறார்கள். வயசு வித்தியாசத்தில் என்றால் அண்ணன் பொன்னையனுக்கு தான் தந்திருக்க வேண்டும்.

ஓபிஎஸ் பொதுச்செயலாளராக ஆக வேண்டும் என்பதற்காக நாடகங்கள் தங்கமணி நடத்தினார். அதற்கு பிறகு தங்கமணி புரிந்து கொண்டு, இப்ப எடப்பாடி கூட சிறப்பாக பயணித்து வருகிறார். தினம் தினம் முதலமைச்சராவதற்கு பல திட்டங்கள் ஓபிஎஸ் போட்டார். இன்று எல்லாம் வீணாகி விட்டது. திடீர்னு ஒரு நாளு ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வம் இருக்கட்டும் என்று தங்கமணி போன்றவர்கள் என்னிடம் கூறினார்கள். அப்பொழுதுதான் கட்சி நன்றாக இருக்கும் என்று சொன்னார்கள். அதற்கு அப்புறம் என்ன ஆச்சு?.

(அப்பொழுது மேடையில் அமர்ந்திருந்த தங்கமணி, என்னடா இவர் நம்மள போட்டு கொடுக்கிறார் என்று நெளிந்து கொண்டார்). இன்று சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் செல்லாக்காசுகள். தேர்தல் ஆணையம், நீதிமன்றம் என்று எல்லா பக்கமும் நமக்கு சாதகமாக மாறியது. கெட்டவன் யார், நல்லவன் யார் என்பதை இந்த நிகழ்வுகள் எல்லாம் கடவுள் வௌியே கொண்டு வந்துள்ளார்’ என்றார். திண்டுக்கல் சீனிவாசன் எப்பவுமே ஏதாவது உளறி கொட்டுவார். தற்போது தங்கமணி சொன்ன சீக்ரெட்டை அவரை வைத்து கொண்டே உளறியது தங்கமணி வயிற்றில் புளியை கரைத்தது.

* ‘காசு கொடுத்தாதான் கட்சிக்காரங்க வேலை செய்யுறாங்க’
திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், ‘1972ல் கிருஷ்ணராயபுரம் தொகுதி பொறுப்பாளராக இருந்த முன்னாள் அமைச்சர் சௌந்தரபாண்டியன், ஒரு பூத்துக்கு செலவுக்கு 20 கொடுப்பார். மொத்தத்திற்கே 200 ரூபாய் தான் கொடுப்பார். அதற்கும் அடிதடி நடக்கும், இன்று 5ஆயிரத்தில் ஆரம்பித்து, 10ஆயிரத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது.

அது எங்கு போய் நிற்க போகிறது என்று தெரியவில்லை. ஆனாலும் பூத் பணம் வருதோ இல்லையோ, தேர்தலில் நிற்பவர்களுக்கு வலி தெரியும். எப்போது பார்த்தாலும் எவ்வளவு பணம் வந்தது என்று தான் கேட்கிறார்கள். மாவட்ட செயலாளர்கள் என்ன கிழிக்கிறிங்க என்று நட்ட நடுவுல கைலிய தூக்கி கட்டிகிட்டு நின்னு கேள்வி கேட்கிறார்கள்’ என்றார்.

The post அதிமுகவுடன் கூட்டணிக்கு வர 20 சீட், ரூ.100 கோடி கேட்கிறார்கள்: களஆய்வு கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் திடுக் தகவல் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Dindigul Srinivasan ,Trichy ,Former minister ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக...