×

அதிமுக ஐடி விங் செயலாளர் தற்கொலை வழக்கு சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: உள்துறை செயலாளரிடம் அதிமுக எம்பி இன்பதுரை புகார்

சென்னை: அதிமுக ஐடி விங் செயலாளர் தற்கொலைக்கு சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக எம்பி இன்பதுரை, உள்துறை செயலாளரிடம் புகார் அளித்துள்ளார். திருப்பூர் மாவட்டம், குண்டடம் மேற்கு ஒன்றியம் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளராக பொறுப்பு வகித்து வந்தவர் செல்வானந்தம். இவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக, உள்துறை செயலாளர் தீரஜ் குமாரை அதிமுக எம்பியும், வழக்கறிஞருமான இன்பதுரை நேற்று சந்தித்து மனு அளித்தார். பிறகு வெளியில் வந்த இன்பதுரை நிருபர்களிடம் கூறியதாவது:

அதிமுக தகவல் தொழில்நுட்பப்பிரிவு செயலாளராக பதவி வகித்து வந்த செல்வானந்தம், தன்னை தற்கொலை செய்வதற்கு சிலர் மிரட்டுவதாக அழுதுகொண்டு ஒரு ஆடியோ வெளியிட்டிருந்தார். இதுதொடர்பாக தற்போது வரை யாரையும் காவல்துறை கைது செய்யவில்லை. அவரது தற்கொலை சம்பவம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே அவரை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மனு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு எவ்வளவோ வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால் ஒருவர் ஆடியோ வெளியிட்டு தற்கொலை செய்துள்ளார். அதன் மீது இதுவரை நடவடிக்கை எடுக்க முடியவில்லை. எனவே, செல்வானந்தம் தற்கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post அதிமுக ஐடி விங் செயலாளர் தற்கொலை வழக்கு சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: உள்துறை செயலாளரிடம் அதிமுக எம்பி இன்பதுரை புகார் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,IT ,Inpathurai ,Home Secretary ,Chennai ,AIADMK IT ,Tiruppur district ,Kundadam West Union ,AIADMK Information Technology Unit ,Secretary… ,Dinakaran ,
× RELATED வரலாற்றில் புதிய உச்சமாக முட்டை விலை 625...