×

அரசுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் இடைநிலை ஆசிரியர்களின் 12 நாள் போராட்டம் வாபஸ்

சென்னை: சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்களுடன் பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளர் நடத்திய பேச்சு வார்த்தைக்கு பிறகு அவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் தொடக்கக் கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2009ம் ஆண்டில் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் தங்களுக்கு சமவேலைக்கு சமஊதியம் வழங்க வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளாக சென்னை கல்லூரிச் சாலையில் உள்ள டிபிஐ வளாகத்துக்கு திடீரென வருவது அங்கே இரவு பகலாக அமர்ந்து ேபாராட்டம் நடத்துவது, கலைந்து செல்வது என்று இதுவரை 6 முறைக்குமேல் போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகும் தங்களது போராட்டத்தை டிபிஐ வளாகத்தில் நடத்தினர். அப்போது அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். மேலும், அவர்களின் ஊதிய முரண்பாடுகளை களைவது குறித்து 3 பேர் கொண்ட குழுவையும் அமைக்க அரசாணை பிறப்பித்துள்ளது. இதற்கிடையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு மீண்டும் சென்னைக்கு வந்த இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் தங்களுக்கு சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று கேட்டு டிபிஐ வளாகத்தில் 10 நாட்களாக இரவு பகலாக உண்ணாவிரதம் இருந்தனர். இதையடுத்து அவர்களிடம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி, ஊதிய முரண்பாடு களைய அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரை வந்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். ஆனால் அவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிடாமல் இருந்தனர்.

இதையடுத்து, 5ம் தேதி காலையில் அவர்களை போலீசார் கைது செய்து எழும்பூரில் 7 சமூகக் கூடங்களில் தங்க வைத்தனர். அவர்கள் நேற்று முன்தினம் மாலை வரை அங்கிருந்தனர். 7 மணி அளவில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் போராட்டத்தில் ஈடுபடாமல் சொந்த ஊர்களுக்கு செல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டனர். அதற்கு உடன்பட்ட இடைநிலை ஆசிரியர்களை நேற்று முன்தினம் மாலை 7 மணி அளவில் போலீசார் விடுவித்தனர். ஆனால், விடுவிக்கப்பட்ட அனைத்து இடைநிலை ஆசிரியர்களும் மீண்டும் டிபிஐ வளாகத்துக்கு வந்து மீண்டும் நேற்று முன்தினம் இரவு தங்கள் போராட்டத்தை தொடங்கினர். அவர்களிடம் போலீசார் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர் உள்ளிட்டோர், இந்த போராட்டம் ரத்து என்று அறிவிக்கும் வரையில் போராட்டத்தை நாங்கள் கைவிட மாட்டோம் என்றும், மீண்டும் கைது செய்தால் எண்ணும் எழுத்தும் பயிற்சியை புறக்கணிப்போம் என்றும், 9ம் தேதி பள்ளிகளுக்கு வராமல் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்துவோம் என்றும் தெரிவித்தனர். அதனால் அவர்களை போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்து வாகனங்களில் ஏற்றி, அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

இருப்பினும், தங்கள் போராட்டம் தொடரும் என்று இடைநிலை ஆசிரியர்கள் தெரிவித்தனர். இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர அரசு முடிவு செய்தது. அதன் பேரில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லாஉஷா அழைப்பு விடுத்தார். அதன்பேரில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று மதியம் 12 மணி அளவில் பள்ளிக் கல்வித்துறை செயலாளரை சந்தித்தனர். அவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் 3 மாத காலத்துக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார். அதற்கு பிறகு தங்களின் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்தனர். இதையடுத்து, 12 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது.

* இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் தங்களுக்கு சமவேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி டிபிஐ வளாகத்தில் 10 நாட்களாக இரவு பகலாக உண்ணாவிரதம் இருந்தனர்.

* பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி, ஊதிய முரண்பாடு களைய அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரை வந்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

* ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிடாததால் 5ம் தேதி காலையில் அவர்களை போலீசார் கைது செய்து எழும்பூரில் 7 சமூகக் கூடங்களில் தங்க வைத்தனர்.

The post அரசுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் இடைநிலை ஆசிரியர்களின் 12 நாள் போராட்டம் வாபஸ் appeared first on Dinakaran.

Tags : day strike ,CHENNAI ,Principal Secretary of School Education ,Dinakaran ,
× RELATED கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவி பாலியல்...