ஆதி சக்திக்கு ஆயிரம் நாமங்கள்
லலிதா சஹஸ்ரநாமங்களின் உரை
ரம்யா வாசுதேவன் & கிருஷ்ணா
குருவிந்த மணிச்ரேணீ கநத் கோடீர மண்டிதா
நாம் சென்ற நாமத்தில் அம்பிகையின் கேச அழகைப் பார்த்தோம். அந்த கேசம் என்பது ஆத்ம வஸ்து என்கிற லலிதாம்பிகையின் தரிசனத்தால் ஒரு ஜீவனுக்குள் எப்பேர்ப்பட்ட பேரின்பம் ஏற்படுகின்றது என்று பார்த்தோம். அம்பிகையால் அருளப்படுகின்ற ஆனந்தத்திற்கும் சாதாரணமாக ஒரு ஜீவன் தன்னுடைய சாதாரண மனதினால் அனுபவிக்கப்படும் சிற்றின்பத்திற்கும் வித்தியாசத்தை உணர வேண்டும். அம்பிகையால் அருளப்படுவதில் துளியளவும் துக்கக் கலப்பு இல்லை. சோகம் இல்லை. தன்னை விட்டு இது நீங்கி விடுமோ என்கிற பயம் இல்லை. அந்த இன்பம் ஒருநாளும் தீரப் போவதில்லை.
அந்த இன்பம் எப்படிப்பட்டது என்பதைத்தான் அம்பாளின் கேசத்தைச் சொல்லி அதில் நான்கு மலர்களையும் உதாரணம் காட்டி லலிதா சஹஸ்ரநாமம் விவரிக்கின்றது. இந்த நாமங்களை நாம் சொல்லச் சொல்ல என்ன ஆகும் என்பதையும் இங்கு நாம் பார்க்க வேண்டும். இந்த நாமங்களைச் சொன்னால் நம்முடைய வாழ்க்கை மாறுமா? அல்லது நாம் நினைத்ததை எல்லாம் அடைவோமா? நிச்சயம் அடைவோம். ஆனால், அது நம் மனதால் கேட்கப்படும் அல்லது பேராசையின் விளைவால் தோன்றும் ஆசைகளின் அடிப்படையால் அல்ல. முதலில் இந்த நாமங்கள் நமக்குள் செல்லச் செல்ல மனதின் வேகம் மெல்ல குறைகின்றது.
ஏன் மனதின் வேகம் குறைகின்றது? எப்படி மனதின் வேகம் குறையும். இந்த நாமங்கள் எதுவுமே உங்களின் மனதினால் வார்த்தைகளாக்கப்பட்டு வருவதல்ல. அது மனதைத் தாண்டிய உள் சத்தியத்திலிருந்து வருபவை. மனதினால் கிரகிக்க முடியுமே தவிர இந்த வார்த்தைகளை மனதால் அழிக்க முடியாது. அல்லது மனதால் ஆளமுடியாது. எனவே, இந்த வார்த்தைகள் இருக்கக்கூடிய இடத்தில் மனம் இராது. இன்னும் கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால் இந்த நாமங்கள் வேறொன்றை இல்லாமல் ஆக்கும். சாதாரணமாக நம் மனதில் தோன்றும் எண்ணங்கள் என்பவை மனம் என்கிற சிறிய பகுதிகளுக்குள் சுற்றியபடி இருக்கும்.
ஆனால், இந்த நாமங்களோ அதையும் தாண்டியுள்ள பெருஞ்சக்தியிடமிருந்து வெளிப்பட்டிருப்பதாகும். எனவே, இந்த நாமங்கள் அந்த சத்தியத்தையே காட்டிக் கொடுக்கும். எனவே, எந்தவித ஐயமும் இல்லாமல் இந்த நாமங்களை நம் மனம் பிடித்துக்கொண்டாலே போதுமானது. இந்த நாமமானது அம்பிகையின் கிரீடத்தை குறிக்கின்றது. இதற்கு முன்புள்ள நாமம் கேசத்தையும் அதில் சூடப்பட்டுள்ள நாமத்தையும் குறிப்பிட்டதை பார்த்தோம். இதை வேறு மாதிரியாகவும் புரிந்துகொள்ளலாம். நம்முடைய மனித உறுப்புகளில் கேசத்திற்கு மேல் ஒரு உறுப்பு கிடையாது.
அப்படிப்பட்ட கேசத்தில் சூடக்கூடிய ஆபரணங்கள் இருக்கின்றதல்லவா, அப்படிப்பட்ட ஆபரணங்களின் மேலான ஆபரணம் கிரீடம். மகுடம். இந்த கிரீடத்திற்கு மேல் இன்னொரு ஆபரணம் கிடையாது. இந்த கிரீடத்தை யார் சூடிக்கொள்வார்களெனில் ராணிதான் சூடிக்கொள்வாள். எனவே, இந்த கிரீடம் என்பதே சர்வ வல்லமையைக் குறிப்பது. இதை ஆரம்பத்திலேயே ஸ்ரீமகாராக்ஞீ என்று பார்த்தோம். இவளே அனைவரையும் ஆளக்கூடியவள் என்ற பொருளைப் பார்த்தோம். இப்போது அந்த கிரீடத்தின் தரிசனம் இங்கு நடப்பதை அதாவது ஜீவன் அனுபூதியில் உணருவதை காண்கின்றோம்.
அந்தக் கிரீடம் எப்படி இருக்கின்றதெனில் குருவிந்த மணிச்ரேணீயாக இருக்கின்றது. குருவிந்தம் என்றால் நவரத்தினத்தில் பத்மராகம் என்கிற ரத்னம் இருக்கிறதே அதைத்தான் குருவிந்தம் என்றழைக்கின்றோம். இந்த ரத்னம் சிவப்பு நிறமாக இருக்கும். இந்த சிவப்பு நிறமாக இருக்கக்கூடிய ரத்னங்கள் பதிக்கப்பட்ட மகுடத்தை சூடியவள் என்று பொருள். கோடீர மண்டிதா என்பது ஜடாமகுடம் போன்ற ஒரு வகையைச் சேர்ந்தது. மற்ற மகுடங்கள் கேசத்தை மறைக்கும். ஆனால், இந்த கோடீரம் என்பது முழுமையாக கேசத்தை மறைக்காது. அதாவது கேசமும் தெரியும். அந்த கேசத்திற்குரிய ஆபரணமும் தெரியும்.
சரி, ஒரு ஆத்ம சாதகனுக்கு இந்த சிவப்புக்கல் பதிக்கப்பட்ட கோடீரம் எதை உணர்த்துகின்றது? சென்ற நாமத்தில் அம்பிகையின் ஆனந்தம் எப்படிப்பட்டது என்று பார்த்தோம். இப்போது இந்த நாமமானது அந்த ஆனந்தத்தை தாண்டி வேறொரு ஆனந்தம் இல்லை, அதற்கு மேலான இன்னொரு ஆனந்தம் இல்லை. அதுவே சிகரம். அதுவே மகுடம் என்பதை இந்த நாமமானது நிச்சயப்படுத்துகின்றது. ஒரு ஜீவன் தன்னுள் தான் தரிசித்த ஆத்ம வஸ்துவின் பிரகாச ஆனந்தம் இதுவே ஆகும் என்று உறுதி கூறுகின்றது. மேலும், இதற்கு மேல் அடைவதற்கு இதைத்தவிர வேறு எதுவுமில்லை என்கிறது.
அதாவது இனி அந்த ஜீவனுக்கு பிறப்பே கிடையாது. இந்த தாயை தரிசித்துவிட்டபின் வேறு தாயின் வழியே பிறப்பில்லை. இன்னொரு விதத்தில் பார்த்தால் அந்த பிரம்மானந்தத்தை கொஞ்சம் அனுபவித்தால்கூட இதற்கு மேல் அனுபவிக்க வேண்டியது ஒன்றுமில்லை என்கிற ஞானம் அவனுக்கு வந்துவிடும். இன்னும் சொல்லப்போனால் இந்த பிரம்மானந்தத்தை அனுபவித்த பிறகு, இந்த கிரீடத்தை தரிசித்து விட்டபிறகு சாதாரண இன்பங்களிலும் அவன் மனம் செல்வதில்லை. மனம் என்கிற எல்லையைத் தாண்டி விடுகின்றான்.
இந்த உலகில் பெறப்பட்டுள்ள எல்லா அறிவும் அழிந்து உண்மையான மெய்யறிவான அம்பிகையின் பேரறிவு வெளிப்படுகின்றது. அதையே இங்கு இவன் தரிசிக்கின்றான். இன்னும் சொல்லப்போனால் இதில் சொல்லப்படுகின்ற பிரம்மானந்தம் என்பது நம்முடைய ஆனந்தமய கோசத்தையும் தாண்டியுள்ள பிரமாண்ட ஆனந்தத்தை குறிப்பது. பரமஹம்ச நிலையைத்தான் இந்த நாமம் சுட்டிக் காட்டுகின்றது.
நாமம் சொல்லும் கோயில்
இந்த நாமத்திற்கான கோயில் வடகுரங்காடுதுறை தயாநிதீஸ்வரர் கோயில் ஆகும். இங்குள்ள அம்பிகையின் பெயரே ஜடா மகுடேஸ்வரி என்பதாகும். எனவே, நேரடியாக இந்த நாமத்தோடேயே அம்பாள் இங்கு அருள்பாலிக்கின்றாள். திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற சோழநாடு காவிரி வடகரையில் அமைந்துள்ள சிவத்தலமாகும்.[1] இச்சிவாலயத்தின் மூலவர் குலை வணங்கிநாதர் என்றும் அம்பிகை அழகு சடைமுடியம்மை என்றும் அழைக்கப்படுகிறார். இத்தலத்தின் மூலவரை வாலி நாதர், சித்தலிங்கேஸ்வரர், தயாநிதீஸ்வரர் என்றும் முன்பு அழைத்துள்ளனர்.
சிவபெருமானின் பக்தர்களான தம்பதியர் வடகுரங்காடுதுறை தலத்திற்கு வந்தனர். அவள் கருவுற்றிருந்தாள். நெடிய பயணத்தில் அவர்களுக்கு நாவறட்சி ஏற்பட்டிருந்தது. அவள் கணவன் தண்ணீரை தேடிச் சென்றான். நேரம் ஆகியதால் அவள் மேலும் சோர்வுற்றாள். எனவே கோயிலின் தென்னைமரம் வளைந்து குலையைச் சாய்த்து. இறைவன் பணியாள் போல வந்து அவளுக்கு இளநீரை சீவித் தந்தான். அவள் அயர்ந்து உறங்கினாள். தண்ணீருடன் வந்த கணவனிடம் நடந்ததை எடுத்துரைத்தாள். நம்ப மறுத்த கணவனுக்கு இறைவன் இறைவியோடு தரிசனம் தந்து உண்மையை உரைத்தார். இத்தலத்தில் இராமாயண வாலி இங்குவந்து தான் வலிமை பெற வேண்டினார்.
அதனால் இறைவன் வாலிநாதர் என்று அழைக்கப்படுகிறார். இத்தலத்தல் வாலி வணங்கியமையால் வடகுரங்காடுதுறைஎன்றும், சுக்ரீவன் வழிபட்ட தலம் தென்குரங்காடுதுறை என்றும் அழைக்கப்படுகிறது. அனுமனும் இத்தலத்தில் பூசை செய்துள்ளார். சிட்டுக்குருவியொன்று இத்தலத்திற்கு அருகேயுள்ள நீர்நிலையிலிருந்து அலகால் நீர் கொணர்ந்து இறைவனுக்கு அபிஷேகம் செய்துள்ளது. அதனால் மகிழ்ந்த இறைவன் அக் குருவிக்கு முக்தியளித்தார். இச்சிவாலயம் தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வடகுரங்காடுதுறை எனும் ஊரில் அமைந்துள்ளது.
இத்தலம் கபிஸ்தலம், ஆடுதுறைப்பெருமாள் கோவில், திருவடகுரங்காடுதுறை போன்ற பெயர்களிலும் அறியப்படுகிறது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழநாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 49வது தலம் ஆகும்.
லலிதா சஹஸ்ரநாமம் கூறும் பரிகாரம்
நமக்கு கிடைக்க வேண்டிய பெரிய பதவியோ அல்லது அங்கீகாரமோ கிடைக்காமல் இருந்தால் இந்த நாமத்தை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் அம்பிகையின் முன்னிலையில் அமர்ந்து சொல்லுங்கள். விரைவில் பதவி உயர்வு பெறுவீர்கள்.
The post அங்கீகாரம் அளிக்கும் அற்புத நாமம் appeared first on Dinakaran.