1. விளம்பர வெளிச்சத்தில் இருக்கும் அண்ணாமலைக்கு எதிரான உங்கள் பிரசாரம் எப்படி இருக்கிறது?
மக்களிடத்தில் நாங்கள் செல்கிறோம். மக்களோடு மக்களாக சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தும் திட்டங்கள் அவர்களை சேர்ந்ததா என கேட்டு, அது குறித்து பேசி வருகிறோம். அதேபோன்று நாங்கள் நாளை வெற்றி பெற்றால் என்னென்ன செய்வோம் என்று சொல்லி மக்களிடத்தில் நாங்கள் வாக்கு கேட்கிறோம். அண்ணாமலை சோசியல் மீடியாவில் நிறைய சொல்கிறார். செய்யாததையும் சொல்கிறார். நாங்கள் திமுக ஆட்சியின் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்கிறோம். இது தான் எங்களுக்கும் அவர்களுக்கும் உள்ள வித்தியாசம்.
2. படித்த இளைஞரான சிங்கை ராமச்சந்திரன் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளாரே?
இப்போது தான் முதல் முறையாக தேர்தல் களத்துக்கு வந்திருக்கிறார். அதிமுகவும் சோசியல் மீடியாவில் தான் அதிகமாக பிரசாரம் செய்கிறது. கொங்கு மண்டலத்தில் அவர்களுக்கு 10 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு தகுந்தவாறு நாங்களும் எங்கள் சாதனைகளை சொல்லி, அதற்கு தகுந்தவாறு பிரசாரம் செய்கிறோம். அதனால் சிங்கை ராமச்சந்திரன் எங்களுக்கு போட்டியாக கூட இருக்க மாட்டார். நாங்கள் போகிற இடங்களில் எல்லாம் மக்களின் வரவேற்பு கிடைப்பதால் எங்களுக்கு எந்த பிரஷரும் இல்லை.
3. தமிழக பாஜ தலைவராக இருக்கும் அண்ணாமலையை எதிர்த்து நிற்பது உங்களுக்கு பலமா, பலவீனமா?
அவரால் எனக்கு பலமும் இல்லை, பலவீனமும் இல்லை. அவர் பாஜ கட்சிக்கு மாநில தலைவர் அவ்வளவு தான். வேறு எந்த அழுத்தமும் அவரால் இல்லை. நாங்கள் தெளிவாக இருக்கிறோம். மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறோம். அவரால் எங்களுக்கு எந்தவித போட்டியும் வராது. நாங்கள் கோவை மக்களுக்கு பல திட்டங்களைச் செய்தவர்கள். அண்ணாமலை இந்த தொகுதிக்கு புதுசு. இன்னும் மக்கள் மத்தியில் அவர் பரிட்சயமாகவில்லை. நான் 3 முறை கவுன்சிலராக இருந்திருக்கிறேன். ஒரு முறை மேயராக இருந்திருக்கிறேன். இந்த தொகுதி மக்களின் தேவைகள் என்ன, குறைகள் என்ன என்பது பற்றி எனக்கு நன்கு தெரியும். அண்ணாமலைக்கு தொகுதியை பற்றி எதுவும் தெரியாது. ஏனோதானோ என்று தான் பேசுகிறார். அமைப்பு ரீதியாக பாஜவிற்கு கோவையில் பலம் இல்லை. மக்களும், பாஜவுடன் தொடர்பில் இல்லை.
4. கொடுப்பவர்களுக்கும், அதை தடுப்பவர்களுக்கும் நடக்கும் யுத்தம் என்று கூறியிருக்கிறீர்களே?
கொடுத்து அழகு பார்ப்பது திமுக ஆட்சி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை, பெண்களுக்கு இலவச விடியல் பயணம் உள்ளிட்ட பல திட்டங்களை மக்களுக்கு கொடுத்து அழகு பார்க்கிறார். அதே சமயத்தில் பாஜ கட்சி இதை இலவசம் என்று சொல்கிறது. நடிகை குஷ்புவை எடுத்துக் கொண்டால், மகளிர் உரிமைத் தொகையை பிச்சை என்று பெண்களை அவமதித்து பேசுகிறார். அவர்கள் அதை தடுக்கிறார்கள் என்று தான் அர்த்தம். அதனால் தான் கொடுப்பவர்களுக்கும், தடுப்பவர்களுக்கும் இடையேயான யுத்தம் தான் இது.
The post செய்த சாதனைகளை சொல்லி வாக்கு கேட்பவர்கள் நாங்கள்: செய்யாததை சொல்லி வாக்கு கேட்பவர் அண்ணாமலை; கோவை தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் appeared first on Dinakaran.