×

உத்திரமேரூரில் பரபரப்பு: அரசு பள்ளியில் திடீர் தீ; ஆவணங்கள் எரிந்து சேதம்


உத்திரமேரூர்: உத்திரமேரூரில் அரசு பள்ளியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஆவணங்கள் எரிந்து சேதமானது. தீபாவளி பட்டாசு வெடியால் தீவிபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதாவது காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உத்திரமேரூர் பேரூராட்சி சின்னநாராசம்பேட்டை தெருவில் ஊராட்சி ஒன்றிய முன்மாதிரி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த 210 மாணவ- மாணவியர்கள் பயின்று வருகின்றனர். பள்ளியின் முக்கிய ஆவணங்கள், ஒரு வகுப்பறையில் வைக்கப்பட்டிருந்தது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று, ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் திடீரென தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் குபுகுபுவென கரும்புகையுடன் தீ மளமளவென எரிய ஆரம்பித்தது.

இதை பார்த்ததும் அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் பெரும்பாலான ஆவணங்கள் தீயில் எரிந்து நாசமானது. தகவலறிந்து உத்திரமேரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். மேலும் வழக்கு பதிவு செய்து பட்டாசு வெடியால் தீவிபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post உத்திரமேரூரில் பரபரப்பு: அரசு பள்ளியில் திடீர் தீ; ஆவணங்கள் எரிந்து சேதம் appeared first on Dinakaran.

Tags : Pandemonium ,Uttaramerur ,Uttara Merur ,Diwali ,Uttara Merur Municipal Corporation ,Chinnarasampet Street Panchayat ,Panchayat ,Dinakaran ,
× RELATED உத்திரமேரூர் அருகே மழை பாதித்த சாலைகள் சீரமைக்கும் பணி தீவிரம்