×
Saravana Stores

ஒரு தெய்வம் தந்த பூவே!

நன்றி குங்குமம் தோழி

குழந்தைகள் மற்றும் பதின்பருவத்தினரின் நடத்தைக் கோளாறு

பொதுவாகவே குழந்தைகள் ஒரு சில நேரங்களில் பெற்றோர் கூறும் எதையும் கேட்க மாட்டார்கள், பள்ளியிலும் ஆசிரியருக்கு கீழ்படிய மாட்டார்கள். இத்தகைய போக்கு குழந்தைகளிடத்தில் சாதாரணமாக இருக்கும் ஒன்றுதான் என்றாலும், மிகத் தீவிரமான எதிர்ப்புத்தன்மை இருந்தாலோ அல்லது ஆறு மாத காலங்களுக்கு மேல் அது நீடித்தாலோ பெற்றோர் கவனமாக செயல்பட வேண்டிய காலக்கட்டம் இது.

நடத்தை கோளாறு (Conduct disorder) என்பது குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினருக்கு ஏற்படக்கூடிய ஒரு தீவிரமான நடத்தை மற்றும் உணர்ச்சிக் கோளாறு ஆகும். இந்தக் கோளாறு உள்ள குழந்தை, சீர்குலைக்கும் மற்றும் வன்முறை நடத்தையின் (disruptive and violent behaviour) வெளிப்பாட்டைக் காட்டலாம். மேலும் இவர்களிடத்தில் பள்ளியிலோ அல்லது சமூகத்திலோ கடைபிடிக்கும் பொதுவான விதிகளை பின்பற்றுவதில் சிக்கல்கள் இருக்கலாம். மற்றவர்களின் பொருட்களை திருடுவது அல்லது பொருட்களை சேதப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடலாம்.

குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினருக்கு அவர்களின் வளர்ச்சியின் போது சில நேரங்களில் நடத்தை தொடர்பான இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுவது சாதாரணமானதாக இருப்பினும், அதுவே நீண்டகாலம் தொடரும் போதும் மற்றவர்களின் உரிமைகளை மீறும் போதும், ​​ஏற்றுக்கொள்ளப்பட்ட நடத்தை விதிமுறைகளுக்கு எதிராக செயல்படும்போதும் அந்தக்குழந்தையையோ அல்லது அக்குழந்தையினுடைய குடும்பத்தினரின் அன்றாட வாழ்க்கையை சீர்குலைக்கும் போது அதை நடத்தை சீர்குலைவாக கருதப்படுகிறது.

உங்கள் குழந்தைக்கு நடத்தைக் கோளாறு இருப்பதை எப்படி அறியலாம்?

நடத்தை சீர்குலைவின் அறிகுறிகள் குழந்தையின் வயதைப் பொறுத்தும் மாறுபடும் மற்றும் கோளாறு லேசானதா, மிதமானதா அல்லது கடுமையானதா என்பதைப் பொறுத்தும் மாறுபடும். பொதுவாக, நடத்தை சீர்குலைவு அறிகுறிகளை நான்கு பொது வகைகளாகப் பிரிக்கலாம்.ஆக்ரோஷமான நடத்தைஇவர்களின் நடத்தைகள் அச்சுறுத்தும் வகையிலும், மற்றவர்களுக்கு உடல் ரீதியான தீங்கு விளைவித்தல் மற்றும் சண்டையிடுதல், கொடுமைப்படுத்துதல், மற்றவர்களிடம் அல்லது விலங்குகளிடம் கொடூரமாக நடந்து கொள்வது, ஆயுதங்களைப் பயன்படுத்துதல் மற்றும் எதிர்பாலாரை பாலியல் ரீதியில் துன்புறுத்துதல் ஆகியவற்றை ஆக்ரோஷமான நடத்தைகளாக கொள்ளலாம்.

அழிவை ஏற்படுத்தும் நடவடிக்கை

வேண்டுமென்றே பொருட்களுக்கு தீ வைப்பது மற்றும் காழ்ப்புணர்ச்சி காரணமாக வேறொரு நபரின் சொத்துக்களுக்கு தீங்கு விளைவிப்பது , அவர்களின் சொத்துக்களை வேண்டுமென்றே அழிப்பது போன்ற அழிவை ஏற்படுத்தும் நடத்தைகள் இவர்களிடத்தில் இருக்கும்.வஞ்சக நடத்தை மீண்டும் மீண்டும் பொய் சொல்வது, பொருட்கள் வாங்கச் செல்லும் போது கடைகளில் திருடுவது அல்லது திருடுவதற்காக வீடுகள் அல்லது கார்களை உடைப்பது போன்ற நடத்தைகளை இவர்கள் கொண்டிருப்பார்கள்.

விதிகளை மீறுதல்

சமூகத்தின் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிகளுக்கு எதிராகச் செயல்படுவது அல்லது தன்னுடைய வயதுக்கு பொருந்தாத நடத்தையில் ஈடுபடுவது இதில் அடங்கும். வீட்டை விட்டு ஓடிப்போவது, பள்ளியைத் தவிர்ப்பது, எதிர்பாராத வகையில் மற்றவரை பயமுறுத்தும் விளையாட்டுகளில் (Pranking) ஈடுபடுவது அல்லது மிக இளம் வயதிலேயே பாலுறவில் சுறுசுறுப்பாக இருப்பது ஆகிய நடத்தைகள் இதில் அடங்கும்.இவை மட்டுமல்லாமல், நடத்தை சீர்குலைவு கொண்ட பல குழந்தைகள் எரிச்சல், குறைந்த சுயமரியாதை கொண்டவர்களாகவும் மற்றும் அடிக்கடி கோபப்
படுபவர்களாகவும் இருப்பார்கள்.

சிலர் போதைப்பொருள் மற்றும் ஆல்கஹால் போன்ற பழக்கங்களுக்கு அடிமையாக இருப்பார்கள். நடத்தை சீர்குலைவு உள்ள குழந்தைகள் தங்களின் நடத்தை மற்றவர்களை எவ்வாறு காயப்படுத்துகிறது என்பதைப் புரிந்துகொள்ளாமல் இருப்பதோடு, மற்றவர்களை துன்பப்படுத்துவதில் சிறிதேனும் குற்ற உணர்வோ அல்லது வருத்தமோ இவர்களுக்கு இருப்பதில்லை. மாறாக மற்றவர்களின் துன்பத்தை கண்டு இவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

குழந்தைகளின் நடத்தைக் கோளாறுக்கான காரணம் என்ன?

நடத்தை சீர்குலைவுக்கான சரியான காரணம் தெரியவில்லை என்றாலும், உயிரியல், மரபணு, சுற்றுச்சூழல், உளவியல் மற்றும் சமூக காரணிகளின் கலவையானது இவர்களின் இத்தகைய நடத்தையில் பங்களிப்பதாக நம்பப்படுகிறது.

உயிரியல் காரணம்

மூளையின் சில பகுதிகளில் ஏற்படும் குறைபாடுகள் அல்லது காயங்கள் நடத்தைக் கோளாறுகளுக்கு வழிவகுக்கும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நடத்தைக் மற்றும் உணர்ச்சிகளை ஒழுங்குபடுத்துவதில் ஈடுபட்டுள்ள குறிப்பிட்ட மூளை பகுதிகளுடன் நடத்தைக் குறைபாடு இணைக்கப்பட்டுள்ளது. இந்த மூளைப் பகுதிகளில் நரம்பு செல் சுற்றுகள் சரியாக வேலை செய்யவில்லை என்றால் நடத்தைக் கோளாறு அறிகுறிகள் ஏற்படலாம்.

மேலும், நடத்தை சீர்குலைவு உள்ள பல குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினருக்கு கவனக்குறைவு, அதிக செயல்பாடு கோளாறு (ADHD), கற்றல் கோளாறுகள் (Learning disabilities), மனச்சோர்வு (Depression), போதைப்பொருட்களுக்கு அடிமை அல்லது கவலைக் கோளாறு (Anxiety disorder) போன்ற பிற மனநோய்களும் உள்ளன. இவை அனைத்துமோ அல்லது ஏதோ ஒன்றோ குழந்தைகளின் நடத்தை கோளாறுக்கு முக்கிய காரணமாகின்றன.

மரபியல்

நடத்தை சீர்குலைவு கொண்ட பல குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினருக்கு மனநல கோளாறுகள், கவலைக் கோளாறுகள், பொருள் பயன்பாட்டுக் கோளாறுகள் மற்றும் ஆளுமைக் கோளாறுகள் உள்ளிட்ட மனநோய்களுக்கு காரணமாக நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் இருக்கின்றனர். இவர்களின் நடத்தை சீர்குலைவு பாதிப்புக்கு குறைந்தது ஓரளவு மரபணுவும் காரணமாக இருக்கலாம்.

சுற்றுச்சூழல்

செயலற்ற குடும்ப வாழ்க்கை (இவர்களின் குடும்பம் சீரற்று இருப்பது), குழந்தை பருவ துஷ்பிரயோகம் (Child abuse), அதிர்ச்சிகரமான அனுபவங்கள் (childhood traumatic experiences), போதைப்பொருள் துஷ்பிரயோகத்தின் குடும்ப வரலாறு மற்றும் பெற்றோரின் சீரற்ற ஒழுக்கம் போன்ற காரணிகள் நடத்தை சீர்குலைவு வளர்ச்சிக்கு பங்களிக்கலாம்.

உளவியல்

தார்மீக விழிப்புணர்வு குறிப்பாக, தான் செய்யும் செயலைப்பற்றிய குற்ற உணர்வோ அல்லது வருத்தமோ இல்லாமல் இருப்பது மற்றும் அறிவாற்றல் செயலாக்கத்தில் குறைபாடுகள் இருப்பதும் நடத்தை சீர்குலைவுள்ள குழந்தைகளிடத்தில் பிரதிபலிப்பதாக சில நிபுணர்கள் நம்புகின்றனர்.

சமூகம்

சமூகத்தில் நலிவடைந்த பொருளாதார நிலை மற்றும் அவர்களது சகாக்களால் ஏற்றுக்கொள்ளப்படாததும் நடத்தை சீர்குலைவு வளர்ச்சிக்கான ஆபத்து காரணிகளாகத் தோன்றுகிறது. சிறுவர்களிடத்தில் நடத்தைக் கோளாறுக்கான அறிகுறிகள் லேசானது முதல் மிதமான மற்றும் கடுமையான வகையில் இருக்கும். இரவில் பெற்றோரின் அனுமதியின்றி நண்பர்களுடன் வெளியே போவது அல்லது தங்குவது, பொய் சொல்வது ஆகியவை பொதுவான சிக்கல்களில் அடங்கும்.

இதுபோன்ற நடத்தை சிக்கல்கள் மிதமானதாக கருதப்படுகிறது. ஏனெனில், இதுபோன்ற நடத்தைகளால் மற்றவர்களுக்கு எந்தவிதமான தீங்கோ பிரச்னையோ ஏற்படுவதில்லை. இவை போன்று உங்கள் பிள்ளைக்கு லேசான அறிகுறிகள் இருந்தால், நோய் இருப்பதை கண்டுபிடிப்பதைத் தவிர, நடத்தையில் எந்தப் பிரச்னையும் இல்லை என்று அர்த்தம்.

மற்றவர்களின் பொருட்களை நாசப்படுத்துதல் அல்லது திருடுவது போன்ற இவர்களின் நடத்தை சிக்கல்கள் மற்றவர்களுக்கு லேசான அல்லது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தலாம். இவர்களின் இத்தகைய நடத்தைகளை மிதமானதாக எடுத்துக் கொள்ளலாம். இவற்றை சாதாரணமாக மனநல ஆலோசனைகள் மூலமாகவே தீர்த்துவிடலாம்.

இதுவே, உங்கள் பிள்ளை கற்பழிப்பு, ஆயுதம் பயன்படுத்துதல் அல்லது அடுத்தவர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைதல் போன்ற சமூகத்தில் மற்றவர்களுக்கு கடுமையான தீங்கினை விளைவிக்கும் நடத்தைகளில் ஈடுபடுவார்களேயானால் அதை கடுமையான அறிகுறிகளாக எடுத்துக் கொண்டு உடனடி மருத்துவ உதவியை நாட வேண்டும்.நடத்தை கோளாறானது, பெண்களை விட ஆண் குழந்தைகளில் மிகவும் பொதுவாக காணப்படுகிறது. பெரும்பாலும் குழந்தை பருவத்தின் பிற்பகுதியில் அல்லது பதின் பருவத்தில் ஏற்படுகிறது.

நடத்தைக் கோளாறுக்கான சிகிச்சை முறைகள்

நடத்தை சீர்குலைவுக்கான சிகிச்சையானது குழந்தையின் வயது, அறிகுறிகளின் தீவிரம், அத்துடன் குறிப்பிட்ட சிகிச்சைகளில் பங்கேற்கும் மற்றும் பொறுத்துக்கொள்ளும் குழந்தையின் திறன் உள்ளிட்ட பல காரணிகளை அடிப்படையாகக் கொண்டது.

உளவியல் சிகிச்சை மனநல சிகிச்சை

இதில், குழந்தைக்கு மிகவும் பொருத்தமான வழிகளில் கோபத்தை வெளிப்படுத்தவும் கட்டுப்படுத்தவும் கற்றுக்கொள்வதை நோக்கமாகக் கொண்ட மனநல ஆலோசனை வழங்கப்படுகிறது. அறிவாற்றல்-நடத்தை சிகிச்சை (cognitive-behavioral therapy) எனப்படும் ஒரு வகை சிகிச்சையானது, சிக்கல் தீர்க்கும் திறன், கோப மேலாண்மை, தார்மீக பகுத்தறிவு திறன் மற்றும் உந்துவிசைக் கட்டுப்பாடு (Impulse control) ஆகியவற்றை மேம்படுத்த குழந்தையின் சிந்தனை மற்றும் அறிவாற்றலை மறுவடிவமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

குடும்ப உறவுகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடையே தகவல்தொடர்புகளை மேம்படுத்த குடும்ப சிகிச்சை பயன்படுத்தப்படலாம். பெற்றோர் மேலாண்மை பயிற்சி (Parent Management Training PMT) எனப்படும் சிறப்பு சிகிச்சை நுட்பம், வீட்டில் தங்கள் குழந்தையின் நடத்தையை நேர்மறையாக மாற்றுவதற்கான வழிகளை பெற்றோருக்கு கற்பிக்கிறது.இவை போன்ற கலவையான சிகிச்சை முறைகள் சிறுவர்களின் நடத்தைக் கோளாறினை சரிசெய்ய அறிவுறுத்தப்படுகிறது.

சிறுவர்களின் நடத்தைக் கோளாறினை ஆரம்பகால கட்டத்திலேயே சரிசெய்யாவிட்டால், பின் நாளில் இவர்கள் தங்களின் பதின் பருவ வயதிலேயே சமூக விரோத செயல்களில் ஈடுபடத் துவங்குவார்கள். நம் வீட்டிலிருந்து ஒரு சமூக விரோதியையோ, ஒரு தீவிரவாதியையோ நாட்டிற்கு கொடுத்த பங்களிப்பின் குற்ற உணர்வை பெற்றோராகிய நாம் ஏற்க வேண்டிவரும். தகுந்த நேரத்தில் நோயைக் கண்டறிந்து உடனடி சிகிச்சையில் தொடங்குவது நல்லது. மாறாக, குடும்பத்தினரும், மற்றவர்களும் இவர்களை கெட்டவர்களாக பார்க்கக்கூடாது. இவர்களுக்கு இருக்கும் மனநலப் பிரச்னையால்தான் இவர்கள் இதுபோன்று நடந்து கொள்கிறார்கள் என்பதை உணரவேண்டும்.

தொகுப்பு: உஷா நாராயணன்

The post ஒரு தெய்வம் தந்த பூவே! appeared first on Dinakaran.

Tags :
× RELATED நோய்… மருந்து… நோயாளி… ஒரு பார்வை!