×

குடியாத்தம் கவுண்டன்ய மகாநதியில் வெள்ளத்தை வேடிக்கை பார்த்த தாய், 2 மகள்கள் மூழ்கி பலி மணல் கடத்தலால் ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கி சோகம்

குடியாத்தம், டிச.1: குடியாத்தம் கவுண்டன்ய மகாநதியில் வேடிக்கை பார்க்க சென்ற தாய், 2 மகள்கள் மணல் கடத்தலால் ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கி, நீரில் மூழ்கி பலியாகினர். நிவர் புயல் காரணமாக பெய்த மழையால் நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. இதேபோல் வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த மோர்தானா அணை நிரம்பி கவுண்டன்ய மகாநதி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது.இதற்கிடையில் கடந்த 2 நாட்களாக ஆற்றில் தண்ணீரின் அளவு குறைந்துவிட்டது. இதனால் குடியாத்தம் மற்றும் சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த சிறுவர்கள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் தண்ணீரில் இறங்கி நீந்தி விளையாடியும், மீன்பிடித்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்து வருகின்றனர்.இந்நிலையில் குடியாத்தம் அடுத்த போடிபேட்டை பகுதியை சேர்ந்த மளிகை கடையில் வேலை செய்யும் யுவராஜ் என்பவரது மனைவி நதியா(30), மகள்கள் நிவேதா(10), ஹர்ஷினி(7) ஆகிய 3 பேரும் நேற்று மாலை போடிபேட்டை, தண்ணீர் டேங்க் பகுதியில் உள்ள கவுண்டன்ய மகாநதி ஆற்றங்கரைக்கு வெள்ளம் பாய்ந்தோடுவதை வேடிக்கை பார்க்க சென்றனர்.

தொடர்ந்து தண்ணீரில் இறங்கியபோது, அங்கிருந்த பெரிய பள்ளத்தில் சிக்கிய 3 பேரும் தண்ணீரில் தத்தளித்தபடி கூச்சலிட்டனர். அவ்வழியாக சென்ற மக்கள் மீட்க முயன்றும் முடியவில்லை. இதற்கிடையில் 3 பேரும் நீரில் மூழ்கினர்.தகவலறிந்த குடியாத்தம் மீட்புப் பணித்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, பொதுமக்கள் உதவியுடன் சுமார் 2 மணி நேரம் போராடி 3 பேரையும் சடலமாக மீட்டனர்.குடியாத்தம் டவுன் போலீசார் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விஏஓ கோபி கொடுத்த புகாரின்பேரில், இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் தகவலறிந்த உதவி கலெக்டர் ஷேக் மன்சூர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு, விசாரணை நடத்தினார்.

தண்ணீரை வேடிக்ைக பார்க்க சென்ற தாய், 2 மகள்கள் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் குடியாத்தம் கவுண்டன்ய மகாநதி ஆற்றிலிருந்து, லாரி மற்றும் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்படுவது கடந்த 2 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. இதுகுறித்து வருவாய்த்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். தற்போது மணல் கடத்தல்காரர்களால் ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கியதால் தாய், 2 மகள்கள் பலியானதாக உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.கேப்சன்...குடியாத்தம் கவுண்டன்யா மகாநதி ஆற்று வெள்ளத்தில் சிக்கி இறந்த தாய் நதியா, மகள்கள் நிவேதா, ஹர்ஷினி.

Tags : floods ,county river ,daughters ,Gudiyatham ,
× RELATED தாய், மகள் மாயம்