×

நிவர் புயல் கரை கடந்ததால் விடிய விடிய தூறல் மழை 414 மி.மீ. மழை பெய்தும் ஏரிகளுக்கு நீர்வரத்து இல்லை

பெரம்பலூர், நவ. 27: பெரம்பலூர் மாவட்டத்தில் நிவர் புயல் கரை கடந்ததால் விடிய விடிய தூறல் மழை பெய்தது. 414 மில்லி மீட்டர் மழை பெய்தும் எந்த ஏரிக்கும் நீர்வரத்து இல்லை. இதனால் விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர்.
வங்க கடலில் மையம் கொண்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிவர் என பெயரிடப்பட்ட புயலாக உருவெடுத்தது. இது கடந்த 25ம் தேதி அதிதீவிர புயலாக மாறும் என அறிவிக்கப்பட்டாலும், 25ம் தேதி இரவு முதல், புயல் நள்ளிரவு கரையை கடந்த பிறகு விடியும் வரை பெரம்பலூர் மாவட்டத்தில் வெறும் தூறல் மழையாக மட்டுமே பெய்து கொண்டிருந்தது. நிவர் புயலால் கனமழை பெய்யக்கூடிய மாவட்டங்களில் பெரம்பலூர் மாவட்டமும் ஒன்றாகும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தால் கணிக்கப்பட்ட நிலையில் அந்த கணிப்பு பெரம்பலூர் மாவட்டத்தில் பொய்யாகி போனது. இருந்தும் கனமழை பெய்யாவிட்டாலும் பரவாயில்லை, கால்பங்கு ஏரியாவது நிரம்புவதற்கு மழை பெய்யுமா என எதிர்பார்த்த பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தையே அளித்தது.

குறிப்பாக பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் (நீர்வள ஆதார அமைப்பு) கட்டுப்பாட்டில் உள்ள 73 ஏரிகளில் கடந்த 18ம் தேதியே 52.63 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட அரும்பாவூர் பெரிய ஏரி, பச்சைமலை மீது கொட்டிய பருவமழையால் நிரம்பி வழிந்து அதன் உபரிநீர் அரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சித்தேரிக்கு செல்ல தொடங்கியது. ஒரு வாரத்துக்கு மேல் தண்ணீர் சென்று கொண்டிருந்தபோதும், இன்னும் ஒரு அடி உயரத்துக்கு சித்தேரி நிரம்பிய பிறகு தான் இன்றோ, நாளையோ நிரம்பி வழியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வடகிழக்கு பருவமழையால் ஆண்டுதோறும் நவம்பர் மாத இறுதியில் ஐந்தாறு ஏரிகளாவது நிரம்புவது வழக்கம். ஆனால் அரும்பாவூர் பெரிய ஏரிக்கு பிறகு சித்தேரியே நேற்று வரை நிரம்பி வழியாமல் தான் உள்ளது. பாண்டகபாடி ஏரி ஏற்கனவே உள்ளபடி 80 சதவீத கொள்ளளவில் அப்படியே உள்ளது.

இந்நிலையில் கனமழையை கொட்டி தீர்க்கும் நிவர் புயல் வருகிறது. பாதுகாப்பாக இருந்து கொள்ளுங்கள் என இந்திய வானிலை ஆய்வு மையமும், தமிழக அரசும் விடுத்த அபாய எச்சரிக்கையை தொடர்ந்து மாவட்ட நிர்வாகங்கள் போர்க்கால அடிப்படையில் பேரிடர் மீட்பு பணிகளுக்காக அரசு இயந்திரம் அனைத்தையும் தயார்படுத்தியது. ஆனால் நிவர் புயல் காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 25ம் தேதி இரவு விடிய விடிய தூரல் மழை மட்டுமே பெய்தது. இதன்படி செட்டிகுளம் 24 மி.மீ., பாடாலூர் 14 மி.மீ., அகரம்சிகூர் 74 மி.மீ., லெப்பைகுடிக்காடு 60 மி.மீ., எறையூர் 60 மி.மீ., புதுவெட்டக்குடி 43 மி.மீ., பெரம்பலூர் 31 மி.மீ., கிருஷ்ணாபுரம் 27 மி.மீ., தழுதாழை 21 மி.மீ., வி.களத்தூர் 32 மி.மீ., வேப்பந்தட்டை 28 மி.மீட்டர் என பெரம்பலூர் மாவட்ட அளவில் 414 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதன் சராசரி 37.64 ஆகும். பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரே இரவில் 414 மில்லி மீட்டர் மழை பெய்தும், வரத்து வாய்க்கால்களிலோ, தெருக்களிலோ, சாலையோரங்களிலோ தண்ணீர் கரைபுரண்டு செல்லும் அளவுக்கு மழை பெய்யவில்லை. பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 73 ஏரிகளில் 70 ஏரிகளில் ஒருஜான் உயரத்துக்குக்கூட தண்ணீர் உயராமல் உள்ளது உள்ளபடியே தான் காணப்படுகிறது.

Tags : Vidya Vidya ,drizzle ,storm ,coast ,Nivar ,Rainwater lakes ,
× RELATED திருச்சியில் சிக்கிய ரூ.1 கோடி அதிமுக...