×

திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

சத்தியமங்கலம், நவ.27: திம்பம் மலைப்பாதையில் லாரி பழுது ஏற்பட்டதால் தமிழக கர்நாடக மாநிலங்களுக்கு இடையே 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோயிலை அடுத்த அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் ‘கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இம்மலைப்பாதை வழியாக இரு மாநிலங்களுக்கிடையே 24 மணி நேரம் வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் பகுதியில் இருந்து கிரானைட் கல் பாரம் ஏற்றிய லாரி சேலம் செல்வதற்காக திம்பம் மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்தது. இரவு 8 மணியளவில் 26 வது கொண்டை ஊசி வளைவில் லாரி திரும்பும்போது பழுது ஏற்பட்டு நகர முடியாமல் நின்றது. இதனால் மலைப்பாதையின் இருபுறமும் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த ஆசனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டனர். பண்ணாரியில் இருந்து கிரேன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு லாரியை நகர்த்தும் பணி நடைபெற்றது.
இரவு 12 மணியளவில் லாரி நகர்த்தி நிறுத்தப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டதை தொடர்ந்து வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன. இதன் காரணமாக இரு மாநிலங்களுக்கிடையே 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : lorry breakdown ,hill ,Thimphu ,
× RELATED கொள்ளிடம் அருகே கீரங்குடி சாலையில்...