×

வத்தல்மலையில் காபி விளைச்சல் அமோகம்

தர்மபுரி, அக்.30: தர்மபுரி அருகே வத்தல்மலையில் சீதோஷ்ண நிலை மாற்றத்தல் காபி விளைச்சல் அமோகமாக உள்ள நிலையில், கொள்முதலுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி அருகே உள்ள வத்தல்மலை  கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளது. வத்தல்மலையில் ஆண்டு முழுவதும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. வத்தல்மலை பகுதியில் தர்மபுரி, மொரப்பூர் ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 9 மலை கிராமங்களில் 498 குடியிருப்புகள் உள்ளன. இக்கிராமங்களுக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 350 ஏக்கரில் காபி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஊடு பயிராக மிளகு, எலுமிச்சை, ஆரஞ்சு, கொய்யா பயிரிட்டுள்ளனர். காபியை பொறுத்தவரை மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் பூக்கள் விடுவதும், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் அறுவடைக்கு வருவதும் வாடிக்கை. தொடர் மழையால் தற்போது காபி விளைச்சல் அதிகரித்துள்ளது. ஆனால், அறுவடை செய்த காபியை விற்பனை செய்ய வழியின்றி விவசாயிகள் விழிபிதுங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஏக்கருக்கு 1 டன் காபி மகசூல் கிடைக்கும். ஆனால், உரிய விலை கிடைப்பதில் சிக்கல் உள்ளது. எனவே, வத்தல்மலையில் காபி போர்டு எனப்படும் கூட்டுறவு சங்கம் அமைக்க வேண்டும். இடைத்தரகர்கள் தலையீட்டால் உரிய விலை கிடைக்காமல் தவிக்கிறோம். மேலும், வேளாண் துறை சார்பில் பல ஆண்டுகளாக தரமான காபி செடிகளோ, மானிய விலையில் உரங்களோ வழங்கப்படுவதில்லை. எனவே, ஏற்காட்டில் டீ போர்டு உள்ளது போல், வத்தல்மலையிலும் ஏற்படுத்தி காபிக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்றனர்.

Tags : Wattalmalai ,
× RELATED வத்தல்மலையில் குறுகலான சாலை...