×

ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் சிஇஓ அலுவலகம் முன் நடந்தது பணி நியமனத்துக்கு வயது வரம்பை ரத்து செய்யக்கோரி

திருவண்ணாமலை, அக்.29: ஆசிரியர் பணி நியமனத்துக்கான வயது உச்ச வரம்பை ரத்து செய்யக்கோரி திருவண்ணாமலையில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், திருவண்ணாமலை சிஇஓ அலுவலகம் முன்பு நேற்று கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சி.ஆ.முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் ஜெயலட்சுமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநில செயலாளர் சி.ஜி.பிரசன்னா, செயற்குழு உறுப்பினர் உமா உள்ளிட்டோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில், கடந்த 50 ஆண்டுகளாக அனைத்து நிலை ஆசிரியர்களும் பெற்றுவந்த உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை ரத்து செய்து, தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும். உயர்கல்வி படிக்க முன் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கும் ஆசிரியர்களுக்கு உடனே அனுமதி வழங்க வேண்டும்.

உயர்கல்வி முடித்து பின்னேற்பு அனுமதிக்காக காத்திருக்கும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வழங்கபட்ட 17பி நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்.
ஆசிரியர் பணியில் சேர அதிகபட்சம் 40 வயது என்ற வயது உச்சவரம்பை ரத்து செய்ய வேண்டும். அதனால், ஆசிரியர் பயிற்சி முடித்த லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பை பெற முடியாத நிலை ஏற்படும் என கோஷமிட்டனர். மாவட்ட பொருளாளர் கோ.வேங்கடபாதி நன்றி கூறினார்.

Tags : demonstration ,primary school teachers ,CEO ,office ,
× RELATED தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முப்பெரும் விழா