×

ஒரே இடத்தில் 28 ஆண்டாக பணியாற்றும் ஊராட்சி செயலர் ஒருமையில் பேசியதால் தலைவர், உறுப்பினர்கள் போர்க்கொடி

தர்மபுரி,  அக்.23: தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்டது தடங்கம்  ஊராட்சி. இந்த ஊராட்சியில் தடங்கம், அவ்வைநகர், இருளர் கொட்டாய், ஜீவாநகர்,  கக்கன்ஜிபுரம், கொத்தடிமை காலனி, நேருநகர், மேட்டுக்கொட்டாய்,  சவுளுப்பட்டி, தாளப்பள்ளம், தோக்கம்பட்டி, சித்தேஸ்வரா நகர், இந்திரா நகர்,  அதியமான் நகர், கொட்டாவூர், சத்யா நகர், பெருமாள் கோயில் மேடு ஆகிய  பகுதிகளில் 8,601 பேர் வசிக்கின்றனர். இந்த ஊராட்சி மன்றத்தின் புதிய  தலைவராக கவிதாமுருகன், துணை தலைவர் உள்ளிட்ட 12 உறுப்பினர்கள் உள்ளனர். ஊராட்சியின் செயலாளராக கஜேந்திரன் பணியாற்றி வருகிறார்.

இவர்  கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஊராட்சி மன்ற தலைவர் உள்பட பெண்  உறுப்பினர்கள், தூய்மை காவலர்கள் ஆகியோரை ஒருமையில் பேசியதாகவும், கூட்டம்  நடக்காமலே புத்தகத்தில் கையெழுத்து போட சொல்வதாகவும், கடந்த ஒரு மாதமாக  ஊராட்சியில் எந்த அடிப்படை பணிகளும் நடக்கவில்லை எனவும் புகார் எழுந்தது.  இதையொட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு உறுப்பினர்கள், சாலை மறியலிலும்  ஈடுபட்டனர். மேலும் ஊராட்சி செயலர் கஜேந்திரனை உடனடியாக இடமாற்றம் செய்ய  வேண்டும் என அதிகாரிகளிடம் வலியுறுத்தியிருந்தனர்.

இந்நிலையில்  நேற்று காலை 10 மணிக்கு தடங்கம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் திடீர் கூட்டம்  நடந்தது. இந்த கூட்டத்தில் நல்லம்பள்ளி பிடிஓக்கள் ஷகிலா மற்றும்  சுருளிநாதன் ஆகியோர் உள்ளாட்சி உறுப்பினர்களிடம் பேச்சு வார்த்தை  நடத்தினர். ஊராட்சி மன்ற தலைவர் கவிதா முருகன், துணை தலைவர் உள்ளிட்ட  அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். சுமார் 3 மணி நேரம் வரை நடந்த  இந்த கூட்டத்தில் தலைவரை ஒருமையில் பேசிய, ஊராட்சி செயலரை இடமாற்றம் செய்ய  வேண்டும் என அனைவரும் வலியுறுத்தினர். பிடிஓக்களின் பேச்சுவார்த்தை  முடிவில், இது தொடர்பாக கலெக்டரிடம் தெரிவிக்கப்பட்டு 15 நாட்களில்  சுமூகமாக நல்ல முடிவு எடுக்கப்படும் என தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களிடம்  பிடிஓக்கள் உறுதியளித்தனர்.இது குறித்து பிடிஓக்கள் ஷகிலா மற்றும்  சுருளிநாதன் கூறியதாவது:

நாங்கள் வழக்கமான ஆய்வு கூட்டம்தான் நடத்தினோம்.  ஊராட்சி செயலாளரை மாற்றுவது தொடர்பாக எதுவும் பேசவில்லை. மேலும் இந்த  கூட்டம் தொடர்பாக வேறு எதுவும் சொல்ல இயலாது என்றார்.இது குறித்து  ஊராட்சி மன்ற தலைவர் கவிதா முருகன் கூறியதாவது: எங்கள் ஊராட்சியின்  செயலாளராக கஜேந்திரன், கடந்த 28 வருடங்களாக பணியாற்றி வருகிறார். கடந்த சில  மாதங்களுக்கு முன்பு இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால் மீண்டும் ஒருசில  வாரங்களில் தடங்கம் ஊராட்சிக்கே பணிமாறுதல் பெற்று வந்துவிட்டார். மேலும்,  உறுப்பினர்கள், தூய்மை காவலர்கள் உள்பட அனைவரையும் ஒருமையில் பேசினார்.  இதனால் நாங்கள் அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என கடந்த மாதமே  அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளோம்.

இதற்காக இன்று (நேற்று) பிடிஓக்கள்  தலைமையில் பேச்சு வார்த்தை நடந்தது. செயலர் கஜேந்திரன் தனது செயலுக்கு  வருத்தம் தெரிவிக்க மறுத்துவிட்டார். இதனால் அதிகாரிகள் 15 நாட்களுக்குள்  இடமாறுதல் குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளனர். இவ்வாறு அவர்  கூறினார். தடங்கம் ஊராட்சி செயலரை இடமாற்றம் செய்ய வேண்டும் என  தலைவர் உள்பட அனைத்து உறுப்பினர்களும் கூட்டத்தில் பிடிஓக்களிடம்  தெரிவித்ததால் அதிகாரிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது.

Tags : panchayat secretary ,place ,
× RELATED கழிவுநீரை பொது இடத்தில் விட்டதை கேட்ட நகராட்சி கமிஷனரை தாக்க முயற்சி