×

பண்ணை பசுமை நுகர்வோர் கடையில் வெங்காயம் ₹85க்கு விற்பனை காட்பாடியில் பொதுமக்கள் ஏமாற்றம் அமைச்சர் ₹45க்கு விற்பனை செய்யப்படும் என்று அறிவித்தும்

வேலூர், அக்.22: காட்பாடியில் செயல்பட்டு வரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடையில் வெங்காயம் ₹85க்கு விற்பனை செய்யப்படுகிறது. அமைச்சர் அறிவித்த ₹45 வெங்காயம் இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.  கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, மராட்டிய மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக வெங்காயம் வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெங்காயம் விலை கிடு கிடு என உயர்ந்து வருகிறது. வேலூர் நேதாஜி மார்க்கெட்டிலும் நேற்று கிலோ ₹100க்கு விற்பனை செய்யப்பட்டது. விலையை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

அதன்படி அனைத்து மாநகராட்சி பகுதிகளில் செயல்படும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் நகரும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலமாக கிலோ ₹45க்கு வெங்காயம் விற்பனை செய்யப்படும். முதற்கட்டமாக நேற்று முதல் அனைத்து மாநகராட்சிகளில் செயல்படும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகளில் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வேலூர் மாவட்டம் காட்பாடியில் செயல்பட்டு வரும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடையில் நேற்று பொதுமக்கள் ₹45க்கு வெங்காயம் வாங்க ஆர்வத்துடன் காலை முதலே வர தொடங்கினர். ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சி தான் மிஞ்சியது.

அதாவது, அங்கு வெங்காயம் கிலோ ₹85க்கு விற்பனை செய்யப்பட்டது. அமைச்சர் கிலோ ₹45க்கு வழங்குவதாக கூறினார். ஆனால் இங்கு ₹85க்கு விற்பனை செய்யப்படுகிறது. அவர் சொன்ன அந்த ₹45க்கு வெங்காயம் தரும்படி அங்கிருந்த பணியாளர்களிடம் பொதுமக்கள் கேட்டனர்.
அதற்கு அங்கிருந்த பணியாளர்கள் இன்னும் அந்த வெங்காயம் வரவில்லை. எப்ேபாது வரும் என்று தெரியாது. தகவல் பலகையில் உள்ள விலைக்கு மட்டுமே இங்கு வெங்காயம் விற்பனை செய்யப்படும் என்று தெரிவித்தனர். இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘வெங்காயம் விலை உயர்வு கட்டுப்படுத்தும் வகையில் கிலோ ₹45க்கு விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அதே பண்ணைப் பசுமை நுகர்வோர் கடையில் கிலோ ₹85க்கு விற்பனை செய்து வருகின்றனர். வெளிமார்க்கெட்டிலும் இதே விலைதான் உள்ளது. அரசு அறிவித்தபடி குறைந்த விலைக்கு வெங்காயம் விற்பனை செய்ய உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்றனர்.

Tags : Farm Green Consumer Store ,disappointment ,Katpadi ,
× RELATED ஆண்டுதோறும் 80 ஆயிரம் மெட்ரிக் டன்...