×

வேலூர் பழைய பஸ் நிலையத்தில் நெரிசலை குறைக்க புதிய மீன் மார்க்கெட் அருகே தற்காலிக பஸ் நிலையம் அமைக்க முடிவு

வேலூர், அக்.1: வேலூரில் பழைய பஸ் நிலையத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புதிய மீன் மார்க்கெட் அருகே தற்காலிக பஸ் நிலையம் அமையுள்ள இடத்தை கலெக்டர் சண்முகசுந்தரம் ஆய்வு செய்தார். வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வேலூர் புதிய பஸ்நிலையம் ₹46 கோடியில் ஸ்மார்ட் பஸ்நிலையமாக மாற்றும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து, சென்னை, காஞ்சிபுரம் செல்லும் பஸ்களை தவிர மற்ற வழித்தடங்களில் இயக்கப்படுகிறது.

பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஆரணி, போளூர், திருவண்ணாமலை, ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், திருச்சி, மதுரை, நாகர்கோவில் ஆகிய ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் உள்ளூர் டவுன் பஸ்களும் பழைய பஸ் நிலையத்தில் இருந்து வழக்கம்போல் இயக்கப்படுகிறது. இதனால், இடநெருக்கடி மற்றும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

நெரிசலை குறைக்கும் வகையில் திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் பஸ்களை மட்டும் வேறு இடத்தில் இருந்து இயக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி சில தினங்களுக்கு முன்பு அண்ணா கலையரங்கம் அருகே பகுதியில் கலெக்டர் சண்முகசுந்தரம் ஆய்வு செய்தார். ஆனால், அந்த இடத்திலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதால் அந்த இடம் கைவிடப்பட்டது. வேறு இடத்தை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடந்து வந்தது.

இந்நிலையில், புதிய மீன் மார்க்கெட் அருகே உள்ள மக்கான் லாரி ஷெட்டை கலெக்டர் சண்முகசுந்தரம் நேற்று ஆய்வு செய்தார். இந்த இடத்தில் இருந்து திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் பஸ்களுக்கான தற்காலிக பேருந்து நிலையமாக தேர்வு செய்தார். இங்கு கழிவறை வசதி, பயணியர் நிழற்குடை ஆகியவற்றை விரைந்து செய்து பஸ் நிலையத்தை தொடங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தற்போது இங்கு நிறுத்தப்பட்டுள்ள லாரிகளை மாங்காய் மண்டி அருகே உள்ள காலியிடம் அல்லது வேறு இடத்தில் நிறுத்த இடம் ஒதுக்கீடு செய்வதற்கான பணிகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஆய்வின்போது டிஆர்ஓ பார்த்தீபன், மாநகராட்சி கமிஷனர் சங்கரன், ஆர்டிஓ செந்தில்வேலன் போக்குவரத்து கழக பொதுமேலாளர் நடராஜன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags : Vellore ,bus stand ,fish market ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...