×

தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் வருகைக்கு அனுமதிக்க வேண்டும்

பென்னாகரம், செப்.30: பென்னாகரம் திமுக எம்எல்ஏ இன்பசேகரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்தியாவில் கொரோனா தொற்று பரவியதால், கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் வர்த்தக நிறுவனங்கள், கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. மேலும், சுற்றுலா தலங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

இதனால், கடந்த 6 மாதங்களாக சுற்றுலா பயணிகளின் வருகையின்றி, ஒகேனக்கல் வெறிச்சோடி காணப்படுகிறது. இதன் காரணமாக, சுற்றுலா பயணிகளை நம்பி உள்ள பரிசல் ஓட்டிகள், மசாஜ் தொழிலாளர்கள், மீன்பிடி தொழிலாளர்கள், சமையல் தொழிலாளர்கள், கடை வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுனர்கள் உட்பட 3 ஆயிரம் குடும்பத்தினர், வாழ்வாதாரத்தை இழந்து வருமானம் இன்றி தவித்து வருகின்றனர். கடந்த மாதம் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட சுற்றுலா தலங்களில், சுற்றுலா பயணிகள் வருகைக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதேபோல், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, ஒகேனக்கல் சுற்றுலா தலத்திற்கு சுற்றுலா பயணிகள் வர தர்மபுரி மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும்.இவ்வாறு இன்பசேகரன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

Tags : Okanagan ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68 கனஅடி