×

ஈரோட்டில் 1,600 பேருக்கு ரேஷன் ஸ்மார்ட் கார்டு வழங்கல்

ஈரோடு, செப். 29:  ஈரோட்டில் கொரோனாவுக்கு பின் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த 1,600 பேருக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் 1,132 ரேஷன் கடைகள் செயல்படுகிறது. இதில், 5.82 லட்சம் பேர் ரேஷன் கார்டுதாரர்களாக உள்ளனர். 2018ம் ஆண்டு முதல் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு, அதன் மூலம் ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. இதில், கடந்த 21ம் தேதி முதல் பயோ மெட்ரிக், அதாவது கைரேகை வைத்தால் மட்டுமே பொருட்கள் விநியோகம் செய்யும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அக்.1ம் தேதி முதல் ஸ்மார்ட் கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் ரேஷன் கடைகளுக்கு நேரடியாக சென்றால் மட்டுமே பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையில், புதிதாக திருமணமானவர்கள், புதிய ஸ்மார்ட் கார்டு பெற ஆன்லைன் மூலமாகவும், இ-சேவை மையத்தின் மூலமாகவும் விண்ணப்பித்து வருகின்றனர்.

மேலும், ஸ்மார்ட் கார்டில் திருத்தம் செய்தும், குடும்ப உறுப்பினர்கள் பெயர் சேர்த்தும், நீக்கம் செய்தும் புதிய ஸ்மார்ட் கார்டு பெற விண்ணப்பித்து வருகின்றனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் விண்ணப்பித்தவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது, ஈரோடு வட்டத்தில் விண்ணப்பித்த அனைவருக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  இது குறித்து ஈரோடு வட்ட வழங்கல் அலுவலர் ஜாகீர் உசேன் கூறியதாவது: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக புதிய ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.  கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் இருந்து ஈரோடு வட்டத்தில் விண்ணப்பித்த 1,601 பேருக்கும் புதிய ஸ்மார்ட் கார்டு அவரவர்கள் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட அலுவலகத்திலும் புதிய ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படுகிறது, என்றார்.

Tags : Erode ,
× RELATED தகிக்கும் கோடை வெயில் பறவைகளுக்கு...