×

கொரோனா பாதித்த வருவாய்த்துறை அலுவலர்களுக்கு கருணை தொகை

திருப்பூர், செப். 25:  கொரோனாவால் பாதிக்கப்பட்ட வருவாய்த்துறை அலுவலர்களுக்கு கருணை தொகை வழங்க வேண்டும் எனக் கோரி நேற்று வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் தமிழக முதல்வருக்கு நேற்று மனு அனுப்பப்பட்டது. திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, திருப்பூர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சாகுல் அமீது மூலம் மனு அனுப்பப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது: கொரோனா நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது விபத்தில் உயிரிழந்த வருவாய்த்துறை அலுவலர்களான, திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சேகர், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த கண்ணப்பன் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜகோபால் ஆகியோரின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும்.

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு நோய் தொற்றில் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து வருவாய்த்துறை அலுவலர்களுக்கும், தமிழக அரசு ஏற்கனவே வெளியிட்ட அரசாணைப்படி கருணைத் தொகையாக ரூ. இரண்டு லட்சத்தை வழங்க வேண்டும். வருவாய்த்துறையில் அனைத்து நிலைகளிலும் தேக்கம் அடைந்ததுள்ள பதவி உயர்வு பட்டியல்களை உடனடியாக வெளியிட வேண்டும். ஜேக்டா-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துறைவாரி மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது. இதில், திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட தலைவர் தயானந்தன், மாவட்ட செயலாளர் முருகதாஸ் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் தங்கவேல் ஆகியோர் உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Corona ,revenue officers ,
× RELATED விடுபட்ட பயிர் காப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்