×

கோவை மாவட்டத்தில் இதுவரை 3.39 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது

கோவை, செப். 25:  கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகள் தொடர்பாக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடந்தது. பின்னர் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்ததாவது: கோவை மாவட்டத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 7 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது. நேற்று (அதாவது நேற்று முன் தினம்) 7 ஆயிரத்து 249 நபர்களின் மாதிரிகள் பெறப்பட்டுள்ளது. மாநகர பகுதிகளில் கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ள 20 நடமாடும் பரிசோதனை வாகனங்கள் துவக்கி வைக்கப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் இதுவரை 11 ஆயிரத்து 97 சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு 11 லட்சத்து 94 ஆயிரத்து 183 பேருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படும் கொரோனா சிகிச்சையின் தரத்தினை உறுதிப்படுத்திட மண்டல அளவிலான கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 39 ஆயிரத்து 89 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டத்தில் அரசு, தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்கள் ஆகிய இடங்களில் மொத்தம் 4 ஆயிரத்து 584 பேர் சிகிச்சையில் உள்ளனர். மாவட்டம் முழுவதும் 9 ஆயிரத்து 136 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கொடிசியாவில் உள்ள சித்தா சிகிச்சை மையத்தில் 812 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் தற்போது 750 பேர் பூரணகுணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 62 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.முன்னதாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் இரண்டு பயனாளிகளுக்கு சிறப்பு சக்கர நாற்காலி, 4 பயனாளிகளுக்கு  காதொலி கருவிகள், ஒரு பயனாளிக்கு ஒரு ஏர் பெட் என மொத்தம் ரூ.2 லட்சத்து 36 ஆயிரத்து 518 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ராஜாமணி, மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண், மாநகராட்சி கமிஷனர் குமாரவேல்பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Coimbatore district ,
× RELATED கொரோனாவுக்கு உலக அளவில் 1,154,305 பேர் பலி