×

காளப்பநாயக்கன்பட்டியில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு குறித்த பேச்சுவார்த்தை தோல்வி

சேந்தமங்கலம், மார்ச் 20:  காளப்பநாயக்கன்பட்டியில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்ட பிரச்னை குறித்து, தாசில்தார் தலைமையில் நடந்த இருதரப்பு பேச்சுவார்த்தை சுமூக தீர்வு எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது. சேந்தமங்கலம் அடுத்துள்ள காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சி 6வது வார்டு மெயின் ரோடு பகுதியில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டியில் இருந்து, அப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கு புதிய குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. அதனை அதே பகுதியை சேர்ந்த ஒரு சமூகத்தினர், பேரூராட்சி அனுமதியின்றி துண்டித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியது. சேந்தமங்கலம் போலீசார் தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானம் செய்து, பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தனர்.

இதையடுத்து நேற்று, சேந்தமங்கலம் தாசில்தார் ஜானகி தலைமையில் மண்டல துணை தாசில்தார் வசந்தி, பேரூராட்சி செயல் அலுவலர் யசோதா, இளநிலை உதவியாளர் அன்வர் பாஷா மற்றும் போலீசார், காளப்பநாயக்கன்பட்டி ஆர்ஐ அலுவலகத்தில் கூட்டம் நடத்தினர். அப்போது இரு தரப்பினரிடம் இருந்தும் அதிகப்படியானவர்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் கூட்டம் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து  நாமக்கல் ஆர்டிஓ தலைமையில், மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.  

Tags : Kallapaneyakanapatti ,
× RELATED மாநில அளவிலான கைப்பந்து போட்டி