×

தர்மபுரி அரசு மருத்துவமனையில் முக கவசத்திற்கு தட்டுப்பாடு

தர்மபுரி, மார்ச் 20:  தர்மபுரி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்கள் மற்றும் செவிலியர், மருத்துவ பணியாளர்கள், ஊழியர்கள் முக கவசம் அணிந்து பணியாற்றி வரும் நிலையில், முக கவசத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் எதிரொலியாக சளி, காய்ச்சல் மற்றும் இருமல் நோய் அறிகுறிகளுடன் உள்ள பல நபர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். வைரஸ் பாதிப்பு ஏற்படாமலிருக்க, முக கவசம் அணிவது கையை அடிக்கடி கிருமிநாசினி தெளித்து, கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அரசு மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு, கிருமிநாசினி தெளித்து கைகளை சுத்தம் செய்ய அரசு மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிப்பை தொடர்ந்து பொதுமக்கள், மருத்துவர்கள் என அனைத்து தரப்பினரிடமும், முக கவசத்தின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் தர்மபுரி அரசு மருத்துவமனையில் டாக்டர்களுக்கும், ஊழியர்களுக்கும் முக கவசத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு, சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் பயன்படுத்தும் எண்-95 வகை மாஸ்க் கூட கிடைப்பதில்லை என ஊழியர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து ஊழியர்கள் கூறுகையில், ‘அவசர சிகிச்சை பிரிவு, நுரையீரல் நோய் பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, தனி வார்டுகளில் பணியாற்றும் டாக்டர்கள் மற்றும் ஊழியர்களுக்கு எண்-95 மாஸ்க் கட்டாயமாக அணிவிக்க வேண்டும். ஆனால் தற்போதைக்கு தட்டுப்பாடு உள்ளது,’ என்றனர். இதுகுறித்து தர்மபுரி மருத்துவக்கல்லூரி டீன் (பொ) சிவக்குமார் கூறுகையில், ‘தற்போதைக்கு தேவையான முக கவசம், தர்மபுரி அரசு மருத்துவமனையில் இருப்பு உள்ளது. ஆனாலும் இன்னும் தேவைப்படுகிறது. இதுபற்றி தமிழக அரசியிடம் கேட்டுள்ளோம். இன்னும் ஓரிரு நாட்களில், அரசிடம் இருந்து போதுமான முக கவசம் வந்து விடும்,’ என்றார்.

Tags :
× RELATED தர்மபுரியில் தொடங்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட ஜவுளி பூங்கா திட்டம்