×

கொரோனா பாதிப்பை தடுக்க 10 அதிவிரைவு படை அமைப்பு

ஈரோடு, மார்ச் 20: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்டத்தில் 10 அதிவிரைவுப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பள்ளி, கல்லூரி, வணிக நிறுவனங்கள், தியேட்டர்கள், ஜவுளி சந்தைகள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. மேலும், இதுதொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பவருடன் தொடர்பில் இருப்பவர்களை கண்டறிய வட்டார அளவில் வட்டாட்சியர், இன்ஸ்பெக்டர், வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டார மருத்துவ அலுவலர் ஆகியோர் அடங்கிய தொடர்பு கண்டறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் ஒரு நபருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று இருப்பதாக கண்டறிப்பட்டால் தொற்று உள்ள நபருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கும். இதுதவிர, ஒவ்வொரு வட்டாரத்திலும் தலா ஒரு டாக்டர், சுகாதார ஆய்வாளர், கிராம சுகாதார செவிலியர் கொண்ட அதிவிரைவு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையில் இக்குழு ஈடுபடும்.அதன்படி, மாவட்டத்தில் 10 அதிவிரைவுப்படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சுகாதாரத்துறை சார்பில் கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு பிரசுரங்கள், செய்திகளை உடனுக்குடன் வழங்க ஒரு டாக்டர் மற்றும் ஒரு மருத்துவ பணியாளர் கொண்ட குழு ஒவ்வொரு வட்டாரத்திலும் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED திண்டல் முருகன் கோயிலில் ரூ.1.20 லட்சத்தில் தென்னை நார் விரிப்புகள்