×

கொரோனா அச்சுறுத்தல் கருங்கல்பாளையம் மாட்டு சந்தை மூடல்

ஈரோடு, மார்ச் 20: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஈரோடு கருங்கல்பாளையத்தில் மாட்டு சந்தை மூடப்பட்டதால் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. ஈரோடு கருங்கல்பாளையத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் விற்பனைக்கு மாடுகளை கொண்டு வருவார்கள். இதேபோல், மாடுகளை கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வாங்கி செல்வார்கள். வாரந்தோறும் சராசரியாக 400 கறவை மாடுகள், 300 கன்றுகுட்டிகள், 250 எருமைகள் விற்பனைக்கு வரும். இந்நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சந்தைக்கு வியாபாரிகள் யாரும் மாடுகளை கொண்டு வராததால் மாட்டுச்சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில்,`கொரோனா வைரஸ், பறவை காய்ச்சல் காரணமாக மாநில எல்லை பகுதியான தாளவாடி, பர்கூர் உள்ளிட்ட பகுதிகளில் கால்நடை துறை, சுகாதார துறை அதிகாரிகள் கடும் சோதனைக்கு பிறகே மாடுகளை கொண்டு செல்ல அனுமதித்து வந்தனர். தற்போது மாவட்டத்தில் மாட்டு சந்தைகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளதால் மாடுகளை லாரிகளில் கொண்டு செல்ல அனுமதிப்பதில்லை. இதனால், வெளிமாநில வியாபாரிகள் வரவில்லை. உள்ளூர் வியாபாரிகளும் கொரோனா பீதியால் வெளியே வரத்தயங்குகின்றனர்’ என்றனர்.

Tags : Corona Threat Carnival ,buffalo beef market closure ,
× RELATED தகிக்கும் கோடை வெயில் பறவைகளுக்கு...