×

கூட்டுறவு வங்கிகள் கடன் அளிப்பதால் சுயதொழில் உற்பத்தித்திறன் அதிகரிக்கும் அமைச்சர் பேச்சு

சிவகங்கை, பிப். 28: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் கூட்டுறவு வங்கிகளின் நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான அடிப்படை பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை வகித்தார். கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன் பயிற்சியை தொடங்கி வைத்து பேசியதாவது:கூட்டுறவு வங்கியின் மூலம் நகைக்கடன் மற்றும் மானியத்தில் உரம், விதைகள் போன்றவற்றை வழங்கும்போது விவசாயிகளுக்கு முழுமையான பயன் கிடைக்கும். கிராமப்பகுதிகளிலுள்ள சுய உதவிக்குழுப் பெண்களுக்கு தேவையான சுழல் நிதிக்கடன்களை வழங்கும்போது சுற்று வட்டாரப் பகுதிகள் முழுவதும் சுயதொழில் உற்பத்தித்திறன் அதிகரிக்கும்.இதனால் பலருக்கு நேரிடையாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு உருவாகுவதுடன் வங்கியில் பணப்பரிவர்த்தனையும் கூடுதலாக இருக்கும். புதிய நபர்களுக்கு கடன் வழங்குவதற்கும் ஏதுவாக இருக்கும். இவ்வாறான செயல்பாட்டை உருவாக்குவது தலைவர்களின் கையில்தான் உள்ளது. கிராமங்கள் முன்னேற்றம் பெறுவதற்கு கூட்டுறவு வங்கி மிக முக்கியமான ஒன்றாகும். ஒவ்வொரு வங்கிகளிலும் உள்ள இயக்குநர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு பேசினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் சந்திரன், கூட்டுறவு சங்கத் இணைப்பதிவாளர் ஆரோக்கியசுகுமார், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர் பழனீஸ்வரி, பாம்கோ கூட்டுறவு சங்கத்தலைவர் நாகராஜன், கூட்டுறவு சங்க துணைப்பதிவாளர் ராஜேந்திரன் மற்றும் கூட்டுறவு சங்கத்தலைவர்கள், இயக்குநர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Banks ,
× RELATED வங்கி ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வு வழங்க ஒன்றிய அரசு ஒப்புதல்