×

பல்வேறு கோரிக்கைகளுக்கு தீர்வுகாண பேரூராட்சி செயல் அலுவலரிடம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மனு

பொன்னமராவதி, பிப்.28: பொன்னமராவதியில் பல்வேறு கோரிக்கைகளுக்கு நடவடிக்கை மேற்கொள்வது குறித்த மனுவினை பேரூராட்சி செயல் அலுவலர் தனுஷ்கோடியிடம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பிரான்சிஸ் மேரி வழங்கினார்.புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலையத்திற்குள் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துவது, இருசக்கர வாகனம் நிறுத்துமிடத்தை விரிவுபடுத்துவது, பேரூராட்சி சந்தை சாலையை விரிவுபடுத்துவது, அண்ணாசாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனம் நிறுத்துதல், சாலையோர வியாபாரிகள் பொது மக்களுக்கு இடையூறு இன்றி வியாபாரம் செய்தல், போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடு, தெரு நாய்களை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பல முக்கிய பிரச்சனைகள் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு மனு ஒன்றை பேரூராட்சி செயல் அலுவலர் தனுஷ்கோடியிடம் பொன்னமராவதி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பிரான்சிஸ் மேரி வழங்கினார். பொதுவாக பொதுமக்கள் தான் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளிப்பது வழக்கம்.

ஆனால் ஒரு போலீஸ் அதிகாரி பேரூராட்சி அதிகாரியிடம் பொதுவான கோரிக்கைகள் அடங்கிய மனு அளித்தது விசித்திரமாக இருந்தது. மேலும் போக்குவரத்து விதிகளை அமல்படுத்த போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ்மேரி பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றார். குறிப்பாக வாகனங்களை மறித்து ஹெல்மெட் போடவில்லை, லைசன்ஸ் இல்லை, ஆர்சி புக் இல்லை என அபராதம் போடுவதில் காட்டும் ஆர்வம் பொன்னமராவதியின் முக்கிய சாலையான அண்ணாசாலையின் போக்குவரத்து நெரிசலை சீர்செய்வது, வாகனங்கள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அடிக்கடி போக்குவரத்து ஸ்தம்பிப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும், சனி மற்றும் செவ்வாய் சந்தை நாட்களில் பேருந்து நிலையம் மற்றும் அண்ணாசாலையில் கண்டிப்பாக போக்குவரத்துக் காவலர்கள் நின்று போக்குவரத்தினை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.மேலும் விளையாட்டில் பல்வேறு சாதனை புரிந்துள்ள இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் மேரி பொதுநலனில் அக்கறை காட்டுபவர். மனிதநேயம் கொண்டவர் என்றெல்லாம் பெயர்பெற்றவர் பொன்னமராவதியில் போக்குவரத்திறனை சீர் செய்து சாதனை படைக்கவேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.


Tags : Transport Inspector ,Action Officer ,
× RELATED நாடு முழுவதும் உள்ள திருப்பதி சொத்துகளுக்கு வேலி அமைக்க முடிவு