×

பிளஸ்2 பொதுத்தேர்வு பணிக்கு 1200 அறை கண்காணிப்பாளர்கள் குலுக்கல் முறையில் தேர்வு

தர்மபுரி, பிப்.27: பிளஸ் 2 பொதுத்தேர்வு பணிக்கு 1200அறைக்கண்காணிப்பாளர்கள் தேர்வு குலுக்கல் முறையில் தர்மபுரியில் நேற்று நடந்தது. தர்மபுரி மாவட்டத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்கி மார்ச் 24ம் தேதி முடிகிறது. பிளஸ் 1 பொது தேர்வு மார்ச் 4ம் தேதி தொடங்கி மார்ச் 26ம் தேதி முடிகிறது. தர்மபுரி மாவட்டத்தில் பிளஸ்2 தேர்வை 70 தேர்வு மையங்களில் (2 தனித்தேர்வு மையங்கள் உட்பட) 9,370 மாணவர்கள் 9,819 மாணவிகள் என மொத்தம் 19,189 பேர் எழுதுகின்றனர். பிளஸ் 1 பொதுத்தேர்வினை 68 தேர்வு மையங்களில் 9,456 மாணவர்கள் 9,986 மாணவிகள் மற்றும் தனித்தேர்வர்கள் 1,784 என மொத்தம் 21,226 பேர் எழுதுகின்றனர். இந்நிலையில், தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில், தேர்வு மையங்களுக்கான அறை கண்காணிப்பாளர்கள் தேர்வு குலுக்கல் முறையில் நேற்று நடந்தது. தேர்வுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா தலைமை வகித்தார். தர்மபுரி கல்வி மாவட்ட அலுவலர் பாலசுப்ரமணி முன்னிலை வகித்தார். அறைக்கண்காணிப்பாளர்கள் தேர்வு அறைகள், அந்தந்த ஆசிரியர்கள் முன்னிலையில் குலுக்கல் முறையில், 1200அறை கண்காணிப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இதையடுத்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா பேசியதாவது: அறை கண்காணிப்பாளர்கள் அனைவரும் குறித்த நேரத்தில், அதாவது காலை 8.45 மணிக்கு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்றுவிட வேண்டும். உடனடியாக முதன்மை கண்காணிப்பாளரிடம் வருகையை உறுதி செய்ய வேண்டும். தங்களுக்கு வழங்கப்பட்டவற்றில் விடைத்தாள்கள் எவ்வளவு, மேப் இணைப்பு ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். அறைக்குள் நுழைந்ததும், ஏதாவது காகிதங்கள், அறை சுவற்றில் எழுதப்பட்டுள்ளதா என கண்காணிக்க வேண்டும். மாணவர்கள் இருக்கைகள் சரியான தூரத்தில் அமைக்கப்பட்டுள்ளதா என சரிபார்க்க வேண்டும்.

தேர்வு அறைக்குள் செல்போன் கொண்டு செல்லக்கூடாது. மாணவர்கள் அறைக்குள் செல்லும் முன்பே, அவர்களை பரிசோதனை செய்ய வேண்டும். மேலும் தேர்வு எழுதுபவரின் அடையாள அட்டையை பார்த்து, தேர்வர் அவர்தானா என சரிபார்க்க வேண்டும். ஐந்தாவது பெல் அடித்ததும் அதாவது 10.15 மணிக்கு தேர்வுகள் துவங்க வேண்டும். தேர்வில் முறைகேடுகள் நடக்காமல் இருக்க, கவனமாக கண்காணிக்க போதிய ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில் உதவி திட்ட அலுவலர் தங்கவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.அரூர்: அரூர் கல்வி மாவட்டத்தில் 6978 பேர் 11ம் வகுப்பு தேர்வும், 6348 பேர் 12ம் வகுப்பு தேர்வும் எழுதவுள்ளனர். அரூர் பகுதியில் அரூர் அரசு ஆண்கள் பள்ளி, பெண்கள் மேல்நிலை பள்ளி, தீர்த்தமலை, நரிப்பள்ளி, மொரப்பூர் ஆண்கள், இந்தியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பிடிஆர்வி உள்பட 19 மையங்களில் நடைபெற உள்ளது.

இங்கு அறை கண்காணிப்பாளர்களாக பணியாற்ற 370 முதுகலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு, அவர்களுக்கான பள்ளி ஒதுக்கீடு குலுக்கல் முறையில் நடைபெற்றது. அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இப்பணியில் மாவட்ட கல்வி அலுவலர் பொன்முடி முன்னிலையில் பள்ளியின் துணை ஆய்வாளர் பொன்னுசாமி,  தலைமை ஆசிரியர்கள் குழந்தைவேல், அப்துல் அஜிஷ் மற்றும் சண்முகம், சதீஷ் ஆகியோர் இப்பணியில் ஈடுபட்டனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா