×

குற்றச்செயலில் ஈடுபட்டு கைதான 4 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது

கிருஷ்ணகிரி,பிப்.19: ஓசூர், பர்கூரில் குற்ற செயல்களில் ஈடுபட்டு கைதான 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜூஜூவாடி சோதனைச்சாவடியில், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டி.எஸ்.பி. முரளி தலைமையில், இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் கடந்த ஜனவரி 18ம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது  கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி பகுதியில் இருந்து வந்த லாரியை போலீசார் சோதனை செய்தனர். அதில் அரியானா மாநிலம், கூர்கான் பகுதியில் இருந்து, தமிழகம் வழியாக கேரள மாநிலத்திற்கு, 15 ஆயிரத்து, 400 லிட்டர் எரிசாராயத்தை கடத்தி செல்வது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து, லாரியில் இருந்த ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், பி.எல்., கண்டிகா பகுதியை சேர்ந்த மோகன் (32), கோவிந்தரெட்டிப்பள்ளியை சேர்ந்த சிவய்யா (32) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. பண்டி கங்காதர் கலெக்டர் பிரபாகருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து 2 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து கலெக்டர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த, திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வெள்ளபெரியான்வட்டம் பகுதியை சேர்ந்த குமார் (40), பாலபனத்தம் பகுதியை சேர்ந்த பெரியண்ணன் (40), ஆகிய 2 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி. கலெக்டருக்கு பரிந்துரைத்தார். இதையடுத்து 2 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.



Tags : crime ,
× RELATED வேலூர் சைபர் கிரைம் போலீஸ்...