×

அரியலூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு விழா

அரியலூர், பிப்.17: அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு விழா மாவட்ட கலெக்டர் ரத்னா தலைமையில், ஜெயங்கொண்டம் எம்எல்ஏ ராமஜெயலிங்கம் முன்னிலையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் இரண்டு பெண் குழந்தை பெற்று குடும்ப கட்டுபாடு செய்த தாய்மார்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை அரசு தலைமைக் கொறடா தாமரை ராஜேந்திரன் வழங்கி பேசுகையில்,
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் சுட்டிக்காட்டப்பட்ட நிலவரத்தை தொடர்ந்து, பெண் குழந்தைகளின் எண்ணிக்கையினை அதிகரிக்க, மத்திய அரசு நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும், பெண் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வரும் 100 மாவட்டங்களை தேர்ந்தெடுத்து பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளை கற்பிப்போம் என்ற புதிய திட்டத்தினை அறிவித்தது. 2014-15ம் ஆண்டில் ரூ.100கோடி செலவில் மத்திய அரசு துவக்கியது. இத்திட்டம் மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
சுகாதாரத்துறை, மனிதவள மேம்பாட்டுத்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகங்களின் கூட்டு முயற்சியில் இத்திட்டம் செயல் படுத்தப்படுகிறது. தற்போது பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் நடைமுறைபடுத்தப்பட்டு வரும் சட்டங்களையும், நலத்திட்டங்களையும் குறித்த விழிப்புணர்வை பரவலாக்கி, பெண் குழந்தைகளின் எண்ணிக்கையை உயர்த்துவது, பாலினபாகுபாடு அடிப்படையில் குழந்தைகளின் பாலினம் அறிந்து கொள்ளப்படுவதை தடுத்தல், பெண் குழந்தைகள் உயிர் வாழ்வதையும், அவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்தல், பெண் குழந்தைகளின் கல்வியினை மேம்படுத்துதல், குடும்ப கட்டுப்பாட்டை ஊக்குவித்தல் போன்றவையாகும்.
நமது மாவட்டத்தில் 2019-20ம் ஆண்டின் பெண் குழந்தைகள் பிறப்பு எண்ணிக்கை 4495, 2019-20 ஆம் ஆண்டின் 2 பெண் குழந்தைகளின் பிறப்பு எண்ணிக்கை 2298 ஆகும். மேலும், அரியலூர் மாவட்டத்தில் 2018-19ம் ஆண்டில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 917 பெண் குழந்தைகள் என விகிதாசாரம் இருந்தது, 2019-20ம் ஆண்டில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 961 பெண் குழந்தைகள் ஆக உள்ளது என்றார். கூட்டத்தில், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் சந்திரசேகர், ஒன்றியக் குழுத்தலைவர் செந்தமிழ்செல்வி, ஒன்றிய வார்டு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், துணை இயக்குநர் ஹேமசந்த்காந்தி, மாவட்ட சமூக நல அலுவலர் அன்புகுளோரியா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் சாவித்திரி, வட்டார மருத்துவ அலுவலர் அனிதா மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Girl Child Protection Awareness Festival ,Ariyalur District ,
× RELATED அரியலூர் மாவட்டம் திருமழபாடியில்...