×

துரிஞ்சாபுரம், தண்டராம்பட்டு ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர் பதவி ஒரு மாதமாக காலியாக இருக்கும் அவலம் நிர்வாக பணிகள் முடங்கியது

திருவண்ணாமலை, பிப்.13: திருவண்ணாமலை மாவட்டத்தில், தண்டராம்பட்டு மற்றும் துரிஞ்சாபுரம் ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர் பதவியிடம் கடந்த ஒரு மாதமாக காலியாக உள்ளதால், நிர்வாக பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை மாவட்டத்தில், ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் கடந்த டிசம்பர் மாதம் 27 மற்றும் 30ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடந்தது. அதைத்தொடர்ந்து, ஜனவரி 2ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தேர்ந்ெதடுக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து, மாவட்ட ஊராட்சிக்குழு, ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர் தேர்தல் மற்றும் ஊராட்சி துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் கடந்த 11ம் தேதி நடந்தது. அப்போது, நிர்வாக காரணங்களுக்காக தண்டராம்பட்டு, துரிஞ்சாபுரம் ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டன.

அதேபோல், கலசபாக்கம், போளூர், புதுப்பாளையம் ஆகிய ஒன்றியங்களில் ஒன்றியக்குழு துணைத்தலைவர் தேர்தல், ஆனந்தல், கீழ்கச்சிராப்பட்டு, குருவிமலை, உச்சிமலைக்குப்பம், ேமல்கரிப்பூர், பெருங்களத்தூர், வடஆளப்பிறந்தான், காரணை, ஏழச்சேரி, அரசூர், தென்சாத்தமங்கலம், பாஞ்சரை, எஸ்.காட்டேரி, விநாயகபுரம், முருகமங்கலம், புங்கம்பாடி ஆகிய 16 கிராம ஊராட்சிகளில் துணைத்தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டன.
அதைத்தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 23 உள்ளாட்சி பதவியிடங்களுக்கான மறைமுகத் தேர்தல் கடந்த மாதம் 30ம் தேதி மீண்டும் நடந்தது. அப்போதும், தண்டராம்பட்டு, துரிஞ்சாபுரம் ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர் தேர்தல் மட்டும் மீண்டும் ஒத்தி வைத்தனர்.

அதன்பிறகு, இந்த பதவியிடங்களுக்கான தேர்தல் எப்ேபாது நடைபெறும் என்பது தொடர்ந்து கேள்விக்குறியாகவே உள்ளது. இரண்டு ஒன்றியங்களிலும் தனி அதிகாரிகளிடம் தற்போதுவரை நிர்வாக பொறுப்பு உள்ளது.
எனவே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றிய கவுன்சிலர்கள் தங்களுடைய பணியை நிறைவேற்ற முடியாமல் தவிக்கின்றனர். மேலும், ஒன்றியக்குழு தலைவர் தேர்ந்தெடுக்காததால், ஒன்றியக் கவுன்சிலர்களை அதிகாரிகள் மதிப்பதில்லை என்றும், நிர்வாக பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் முடிந்து ஒரு மாதம் கடந்த பிறகும், இரண்டு ஒன்றியங்களிலும் தேர்தல் நடத்தாமல் கிடப்பில் போடப்பட்டிருப்பதற்கு ஆளும்கட்சியின் அழுத்தமே காரணம் என கூறப்படுகிறது.

காலதாமதம் செய்வதன் மூலம், கவுன்சிலர்களை அச்சுறுத்தி தங்களுக்கு ஆதரவாக மாற்றுவதற்கான முயற்சியில் ஆளும்கட்சியினர் ஈடுபட்டிருப்பதாகவும், அதற்கு அதிகாரிகள் சிலர் உடந்தையாக இருப்பதாகவும் கவுன்சிலர்கள் வேதனைப்படுகின்றனர். எனவே, தண்டராம்பட்டு, துரிஞ்சாபுரம் ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தலை, தாமதப்படுத்தாமல் உடனடியாக நடத்த வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்

Tags : Durinapuram ,Vice-President ,Dandarambattu Union Committee Chairman ,
× RELATED வெலிங்டன் கன்டோன்மென்ட் துணைத்தலைவர் வீட்டிற்கு ஜப்தி நோட்டீஸ்