×

அரசு கலைக்கல்லூரியில் அடிப்படை வசதிகள் கேட்டு மாணவர்கள் மனு

தர்மபுரி, ஜன.28:  தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, மாணவர்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில், நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், தர்மபுரி அரசு கலைக்கல்லூரி இந்திய மாணவர் சங்கத்தினர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறோம். கல்லூரியில், அத்தியாவசிய தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் சரியான முறையில் செய்யவில்லை. இதனால், கழிவறை மற்றும் தண்ணீர் வசதியின்றி தவித்து வருகிறோம். வகுப்பறைகளை தினமும் சுத்தம் செய்ய வேண்டும். இலவச நாப்கின் வழங்க வேண்டும். சேலம் மெயின்ரோட்டில் கல்லூரி முன்பு வேகத்தடையை மீண்டும் அமைக்க வேண்டும். காலி பணியிடங்களுக்கு பேராசிரியர்களை நியமிக்க வேண்டும். தொலை தூரத்தில் இருந்து வரும் மாணவர்களின் வசதிக்காக கல்லூரி வளாகத்தில் கேன்டீன் அமைக்க வேண்டும். மாணவர்களுக்கு வழங்க வேண்டிய ஊக்க தொகையை உரிய காலத்தில் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், பாப்பிரெட்டிப்பட்டி அருகே இருளப்பட்டியை சேர்ந்த பழனி மனைவி செல்வி, நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: எனது கணவர் பழனி, அரசு போக்குவரத்து கழக தர்மபுரி மண்டலத்தில் 20 வருடம் பணிபுரிந்தார். பணிக்காலத்தில் கடந்த 16.11.2004ல் காலமானார். அவர் இறந்த பின்னர், குடும்பத்தை நடத்த சிரமமாக உள்ளது. எனவே, கணவரின் வேலையை எனது மகனுக்கு வாரிசு  அடிப்படையில் வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதேபோல், அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி இறந்தவர்களின் 20க்கும் மேற்பட்ட வாரிசுகள், வேலை கேட்டு மனு அளித்தனர்.


Tags : facilities ,Government Arts College ,
× RELATED உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை...