சாலை பாதுகாப்பு வாரவிழா விழிப்புணர்வு போட்டி

கிருஷ்ணகிரி, ஜன.24:  31வது சாலை பாதுகாப்பு வாரவிழாவினையொட்டி, கிருஷ்ணகிரியில் நடைபெற்ற விழிப்புணர்வு போட்டியில் பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். கிருஷ்ணகிரியில், வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், 31வது சாலை பாதுகாப்பு வாரவிழா நடைபெற்று வருகிறது. 3வது நாளான நேற்று, கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டி, சாலை பாதுகாப்பு வாசக போட்டி, பட்டிமன்றம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஓவியப் போட்டியில் 150 மாணவ- மாணவிகள் பங்கேற்றனர். இவர்கள் போக்குவரத்து விதிகள், சாலை பாதுகாப்பு, மது அருந்தாமல் வாகனம் ஓட்டுதல், போக்குவரத்து சின்னங்கள் உட்பட பல்வேறு ஓவியங்களை வரைந்தனர். மேலும், பேச்சு, சாலை பாதுகாப்பு வாசகப் போட்டி, பட்டிமன்றம் ஆகியவற்றில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதில், வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு, கலெக்டர் பிரபாகர் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி, பாராட்டினார்.

Tags :
× RELATED சாலை பாதுகாப்பு வாரவிழா கிரசண்ட் பள்ளியில் விழிப்புணர்வு போட்டி