அடிக்கடி ரத்து செய்யப்படும் மன்னார்குடி - மானாமதுரை ரயில் பயணிகள் அவதி

சிவகங்கை, ஜன. 24: சிவகங்கை ரயில்வே ஸ்டேஷன் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. இவ்வழியே இருந்த மீட்டர் கேஜ் பாதை அகற்றப்பட்டு கடந்த 2008ம் ஆண்டு அகல ரயில்பாதையாக மாற்றப்பட்டது. சிவகங்கையிலிருந்து சென்னை, திருச்சி, மன்னார்குடி, விருதுநகர், ராமேஸ்வரம், கன்னியாகுமரி, கோவை, புதுச்சேரி, புவனேஸ்வர், வாரணாசி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினந்தோறும் சுமார் 10க்கும் மேற்பட்ட ரயில்கள் இவ்வழியே செல்கின்றன. திருச்சி, ராமேஸ்வரம், காரைக்குடி, மானாமதுரை வழி செல்லும் ரயில்களில் புதுக்கோட்டை, காரைக்குடி, தேவகோட்டை, கல்லல், சிவகங்கை மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான அரசு ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் பயணம் செய்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக மன்னார்குடியில் இருந்து சிவகங்கை வழியே மானாமதுரைக்கு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் சிவகங்கைக்கு பகல் 12.30 மணிக்கு வரும். மீண்டும் மானாமதுரையில் இருந்து பிற்பகல் 2.15 மணிக்கு சிவகங்கைக்கு வந்து காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர் வழியாக இரவு 8 மணிக்கு மன்னார்குடி சென்றடையும்.

பகல் நேரத்தில் இயக்கப்படும் இந்த ரயிலால் சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி மாவட்ட மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து சில நாட்களுக்கு ஒரு முறை இந்த ரயில் ரத்து செய்யப்பட்டு வருகிறது. ரயில் ரத்து செய்யப்படுவது குறித்து எவ்வித முன்னறிவிப்பும் செய்வதில்லை. இதனால் ரயிலில் பயணம் செய்ய வருபவர்கள் கடும் சிரமமடைகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, ‘எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் ரயிலை ரத்து செய்கின்றனர். இதனால் தேவையற்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. இதுபோல் அடிக்கடி நிகழ்வதால் இந்த ரயிலை நம்பி எப்படி பயணம் செய்ய வருவது. ரயிலை ரத்து செய்வதை நிறுத்த வேண்டும். தினமும் ரயிலை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரயில் ரத்து குறித்து ரயில்வே நிர்வாகம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்’ என்றனர்.

Tags : cancellation ,railway commuters ,Mannargudi - Manamadurai ,
× RELATED மே மாதத்துக்குள் கொரோனா கட்டுக்குள்...