×

பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற கொல்லிமலை அரசு பள்ளிகளில் டிஇஓ ஆய்வு

நாமக்கல், ஜன. 23: கொல்லிமலையில் உள்ள அரசு பள்ளிகளில், மாவட்ட கல்வி அலுவலர் உதயக்குமார் ஆய்வு செய்தார். மத்திய அரசின் நிதி உதவியுடன் செயல்படும் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளி மாணவ, மாணவியருடன், மாவட்ட கல்வி அலுவலர் உதயக்குமார் கலந்துரையாடினார். அப்போது, குழந்தைகளுக்கு தரமான கல்வியை அளிக்கும்படி ஆசிரியர்களை கேட்டுகொண்டார். பின்னர், குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவை சாப்பிட்டு பார்த்து, மாணவிகளிடம் அதன் தரம் குறித்து கேட்டறிந்தார். சேளூர்நாடு அரசு உயர்நிலைப்பள்ளிக்கு சென்ற அவர், 10ம் வகுப்பு மாணவர்களை சந்தித்து அரசு பொதுத்தேர்வு நெருங்கி வருவதால், தேர்வுக்கு நல்ல முறையில் தயாராக வேண்டும் என அறிவுறுத்தினார். தொடர்ந்து கொல்லிமலை மாதிரி பள்ளியில், 76  அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அடங்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட கல்வி அலுவலர் உதயக்குமார் பேசுகையில், ‘அரசு பள்ளிக்கு வரும் மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பதை பெரும் பாக்கியமாக கருதி பணியாற்ற வேண்டும். அரசின் நலத்திட்ட உதவிகள் மூலம் மலைவாழ் மக்களின் குழந்தைகள் அனைவரும், அரசு பள்ளியை நோக்கி  வரும் நிலையை ஏற்படுத்த வேண்டும். இந்த கல்வியாண்டில் கொல்லிமலையில் உள்ள அனைத்து மாணவ, மாணவியர் 100 சதவீத தேர்ச்சி பெறவேண்டும். தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால், மெல்ல கற்கும் மாணவர்களுக்கு தனியாக பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்,’ என்றார். இந்த கூட்டத்தில் வட்டார கல்வி அலுவலர்கள், அரசு உயர்நிலை, மேல்நிலை மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags : government schools ,
× RELATED பள்ளி வளாகங்களில் செயல்படும் கல்வி...