×

எண்ணேகொல் தடுப்பணையில் இருந்து கால்வாய் அமைக்கும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்

கிருஷ்ணகிரி, ஜன.23:  கிருஷ்ணகிரி மாவட்டம் எண்ணேகொல் தடுப்பணையில் இருந்து புதிய கால்வாய் அமைக்கும் திட்டத்தினை விரைந்து செயல்படுத்த வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சென்னைய நாயுடு, தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாரசந்திரம் தடுப்பணையில் இருந்து படேதலாவ் ஏரிக்கு மழைக்காலங்களில் தண்ணீர் வந்து, ஏரி நிரம்பியது. ஏரி நீரை நம்பி பர்கூர் ஒன்றியத்தை சேர்ந்த விவசாயிகள், படேதலாவ் ஏரிக்கு கிழக்கே உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் சென்றடையும் வகையில் புதிய கால்வாய் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அந்த கோரிக்கையை ஏற்று 2005ம் ஆண்டு படேதலாவ் ஏரி முதல் காட்டாகரம் ஏரி வரை 11 ஏரிகளை இணைக்கும் வகையில் புதிய கால்வாய் அமைக்கும் பணி துவங்கி, 2009ம் ஆண்டு  முடிக்கப்பட்டது. ஆனால், படேதலாவ் ஏரிக்கு தண்ணீர் வர வழியில்லாததால் ஏரி வறண்டு காணப்படுகிறது.

இந்நிலையில், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே எண்ணேகொல் தடுப்பணையில் இருந்து படேதலாவ் ஏரிக்கும், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தும்பலஅள்ளி அணைக்கும் பல ஏரிகளை இணைக்கும் வகையில் புதிய கால்வாய் அமைத்து தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று, கடந்த 2017ம் ஆண்டு கிருஷ்ணகிரியில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் தமிழக முதல்வர் இந்த திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என அறிவித்தீர்கள். ஆனால் அந்த திட்டப்பணிகள் இதுவரை நடைபெறவில்லை. இதனால் இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் தண்ணீரின்றீ அவதியடைந்து வருகின்றனர். எனவே, இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்து, இரண்டு பிரதான கால்வாய்களையும் அமைத்து தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : canal ,oil barrier ,
× RELATED பத்தமடையில் இடிந்து காணப்படும்...