×

முஷ்ணம் அருகே துணிகரம் சத்துணவு அமைப்பாளர் வீட்டில் கொள்ளையடித்த வாலிபர் கைது

முஷ்ணம், ஜன. 23: முஷ்ணம் அருகே சத்துணவு அமைப்பாளர் வீட்டில் பணம் கொள்ளையடித்த வாலிபர், அங்குள்ள டீக்கடையில் வழிப்பறி செய்த வழக்கிலும் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.      முஷ்ணம் அடுத்த சோழத்தரம் அருகே தண்டேஸ்வரநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேளாங்கண்ணி மகன் சிவா என்கிற ஜோ ஆண்டனி (19). இவர் மீது திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. வேளாங்கண்ணியும் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர். இந்நிலையில் கடந்த 20ம் தேதி பாளையங்கோட்டை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த அறிவுக்கண்ணன் மனைவி தமிழ்மணி (சத்துணவு அமைப்பாளர்) என்பவர் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார். மதியம் வீடு திரும்பியபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 1500 ரூபாயை காணவில்லை. இது தொடர்பாக அவரது கணவர் அறிவுக்கண்ணன் (36) என்பவர் சோழத்தரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை கும்பலை தேடி வந்தனர்.

 இதற்கிடையே 21ம்தேதி காலை சோழத்தரம் மெயின்ரோட்டில் உள்ள அஜய் என்பவரது டீக்கடையில் ரங்கசாமி என்பவரிடம் கத்தியை காட்டி 500 ரூபாயை வாலிபர் ஒருவர் பறித்துச்சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் சோழத்தரம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.   நேற்று மாலை சோழத்தரம் சப்- இன்ஸ்பெக்டர் இளையராஜா மற்றும் போலீசார் மாமங்கலம் சோதனைச்சாவடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது அவ்வழியே பைக்கில் சந்தேகப்படும்படி வந்த வாலிபரை மடக்கி விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் ஜோ ஆண்டனி என்றும், சத்துணவு அமைப்பாளர் தமிழ்மணி வீட்டில் 1500 ரூபாய் திருடியதும், டீக்கடையில் ரங்கசாமி என்பவரிடம் 500 ரூபாய் வழிப்பறி செய்ததும் அவர்தான் என தெரியவந்தது. பின்னர் அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட ஜோ ஆண்டனி கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவர் எனவும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தவர் எனவும் போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : robbery ,home ,
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில்...