மாவட்டத்தில் 2018ம் ஆண்டை விட 2019ல் 14% விபத்துகள் குறைந்துள்ளது

கிருஷ்ணகிரி, ஜன.22: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2018ம் ஆண்டை விட 2019ம் ஆண்டு 14 சதவீதம் விபத்துகள் குறைந்துள்ளதாக சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு பேரணியில் ஏடிஎஸ்பி தெரிவித்தார். கிருஷ்ணகிரியில் 31வது சாலை பாதுகாப்பு வார விழாவின் 2வது நாளான நேற்று விழிப்புணர்வு பேரணி நடந்தது. இப்பேரணியை ஆர்டிஓ தெய்வநாயகி தொடங்கி வைத்தார். ஏடிஎஸ்பி சக்திவேல், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வெங்கடேசன், ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது, ஏடிஎஸ்பி சக்திவேல் பேசுகையில், சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு போக்குவரத்து விதிகளை இந்த ஒரு வாரத்திற்கு மட்டும் கடைபிடிக்காமல், எப்போதும் கடைபிடிக்க வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டில் கொலை சம்பவத்தால் 90 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சாலை விபத்தில் சிக்கி 450 பேர் வரை இறந்துள்ளனர்.

கொலைக்கு ஏதோ ஒரு காரணம் இருக்கும். ஆனால், சாலை விபத்தில் எந்த காரணமும் இல்லாமல், யாரோ ஒருவர் செய்யும் தவறினால் மற்றவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் இவர்களை நம்பி உள்ள குடும்பத்தினர் எப்போதும் துன்பத்தை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. படிக்க வேண்டிய குழந்தைகள் தந்தை இன்றி கூலி வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். எனவே, ஒவ்வொருவரும் சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும். கடந்த 2018ம் ஆண்டை விட 2019ம் ஆண்டு 14 சதவீதம் விபத்துகள் குறைந்துள்ளது என்றார். பேரணியில் பள்ளி மாணவர்கள், தனியார் பள்ளி பஸ் ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பேரணியானது பெங்களூர் சாலை வழியாக சென்று தாலுகா அலுவலகம் அருகே நிறைவடைந்தது. இதில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் செந்தில், அன்புசெழியன், ஓசூர் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் விஜயகுமார், தரணிதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பேரணியின் போது, பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.

Tags : county ,accidents ,
× RELATED கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்ற...