தர்மபுரி தனியார் விடுதியில் கரும்பு வெட்ட கூலி ஆட்களை அழைத்து செல்லும் புரோக்கர் மர்மச்சாவு


தர்மபுரி, ஜன.22: விவசாய பணிக்கு ஆட்களை அழைத்து செல்லும் பரமத்திவேலூரை சேர்ந்த புரோக்கர் மர்மமான முறையில் தர்மபுரி தனியார் விடுதியில் இறந்து கிடந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சோழசிராமணி பகுதியை சேர்ந்தவர் அருள்மொழி தேவர் (45). விவசாயியான இவர் கரும்பு வெட்டுவதற்கு கூலி ஆட்களை  அழைத்து செல்லும் புரோக்கர் வேலையும் பார்த்து வருகிறார். இந்நிலையில்,  பாலக்கோடு அருகே கரும்பு வெட்டுவதற்காக சிலர் அழைத்துள்ளனர். அதற்காக  நிலத்தை பார்வையிடுவதற்காக கடந்த 18ம் தேதி அருள்மொழி தேவர் பரமத்திவேலூரில் இருந்து தர்மபுரிக்கு வந்தார். பின்னர் பாலக்கோடு தக்காளி மார்க்கெட் அருகே தனியார் தங்கும் விடுதியில் தங்கினார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வெகுநேரமாகியும் அவர் அறையை விட்டு விட்டு வெளியே வராததால் விடுதி மேலாளர் சென்று பார்த்துள்ளார். ஆனால் கதவு மூடிக்கிடந்தது. பின்னர் கதவை அவர் தட்டினார். ஆனால் கதவு திறக்காததால், ஜன்னல் வழியாக பார்த்தார். அப்போது படுக்கையிலேயே அருள்மொழி இறந்து கிடந்ததை கண்டார். இதுகுறித்து பாலக்கோடு போலீசில் விடுதி மேலாளர் புகார் அளித்தார். இதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அருள் மொழித்தேவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவரை பற்றி பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் அளித்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் தற்கொலை செய்தாரா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Tags : broker ,Marmachau ,sugarcane workers ,Dharmapuri ,hotel ,
× RELATED ஆவடி அருகே மாயமான வாலிபர் மர்மச்சாவு