×

பெண்களின் மனநிலையை மாற்றும் ‘பேஸ்புக்ைக’ தவிர்க்க வேண்டும்

திருப்பூர்,  ஜன. 21: ‘பேஸ்புக்’ மூலம் ஏற்படும் நட்பு மூலம் பாதிக்கப்பட்ட பெண்களின்  எண்ணிக்கை ஏராளம். எனவே, அதை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என பள்ளி  விழாவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார். சிமெண்ட்  கற்தளம் திறப்பு விழா, கொடையாளர்களுக்கு பாராட்டு விழா மற்றும் தேசிய,  மாநில அளவில் பரிசுபெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா  திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் பள்ளியில் நேற்று நடந்தது. இதில்  தலைமை ஆசிரியை ஸ்டெல்லா மேரி வரவேற்றார். மாவட்ட கல்வி அலுவலர் பழனிசாமி,  தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஈஸ்வரன்  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்ச்சிக்கு திருப்பூர் வடக்கு போலீஸ்  இன்ஸ்பெக்டர் கணேசன் சிறப்பாக அழைப்பாளராக கலந்துக்கொண்டு, புதிதாக  அமைக்கப்பட்ட தளத்தை திறந்து வைத்து மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி  பேசினார். அப்போது இன்ஸ்பெக்டர் கணேசன் பேசியதாவது: நல்ல பழக்க  வழக்கங்களை மாணவிகள் கொண்டு இருக்க வேண்டும். 8ம் வகுப்புக்கு மேல்  படிக்கும் மாணவிகளுக்கு அதிக அளவில் விழிப்புணர்வு தேவைப்படுகிறது. இந்த  காலக்கட்டத்தில் இருக்கக்கூடி மாணவிகள் அதிக விஷயங்களை கற்றுக்கொள்ளுங்கள்.  அதில் தப்புக் கிடையாது. ஆனால், அதில் இருக்கும் கெட்டதை செயல்படுத்த ஆசை  மட்டும் படாதீர்கள்.

ஒரு நிமிடம் உங்களது பெற்றோர்களையும், குடும்ப  சூழ்நிலைகளையும் நினைத்து பார்த்தால், தவறான எண்ணங்கள் வராது. ஆசிரியர்கள்  மற்றும் பெற்றோர்களிடம் அனைத்து விதமான தகவல்களையும்  பகிர்ந்துக்கொள்ளுங்கள். அப்போது அதில் ஏதாவது பிரச்னை இருந்தால் உரிய  தீர்வு கிடைக்கும். எப்படி சொல்வது என நினைத்து, உங்கள் மனதில் போட்டு  உங்களையே நீங்கள் வருத்திக்கொள்ளாதீர்கள். சொல்லாமல் மனதில் வைத்திருந்தால்  படிப்பு பாதிக்கப்படுவதோடு, யாரிடமும் நல்ல முறையில் பேச முடியாது.  ஆசிரியர்களும் மாணவிகளுடன் நட்புடன் பழகினால், இருவரிடையே உள்ள இடைவெளி  குறையும். 5 நிமிடம் ஆசிரியர்கள் மாணவிகளுக்காக ஒதுக்கி அவர்களிடம்  பேசுங்கள். காவல்துறை சார்பில் ‘காவலன் ஆப்’ (செயலி)  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும். மேலும்  இந்த செயலியில் உள்ள SOS பட்டனை அழுத்தினால் உடனடியாக காவல்துறை  கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் சென்று சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து  வருவார்கள். ஆகவே, அனைவரும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ள  வேண்டும். செல்போனை நல்லதுக்கு மட்டும் பயன்படுத்துங்கள். பேஸ்புக்,  இன்டர்நெட் ஆகியவற்றில் வரும் தவறான எந்த தகவலும் உங்களுக்கு வேண்டாம்.  இந்த இரண்டும் 99 சதவீதம் பெண்களின் மனநிலையை மாற்றுகிறது.

பேஸ் புக்கில்  ஏற்படும் நட்பு மூலம் சீரழிந்த பெண்களின் எண்ணிக்கை ஏராளம்.  விருப்பப்பட்டு, ஆண்களுடன் சென்ற பெண்களில் பலர் அந்த நபருடன் ஒரு வாரம்தான் இருப்பார்கள். இன்று (நேற்று) காலையில் கூட பேஸ் புக் பழக்கத்தில்  விருப்பப்பட்டு சென்ற 3 பெண்கள் போலீஸ் ஸ்டேஷன் வாசலில்  நின்றுக்கொண்டிருந்தனர். ஆகவே, பெற்ற தாய், தந்தையை நினைத்துப் பாருங்கள்,  அப்போது தவறான எண்ணம் வராது. மேலும் ஆசிரியர்களின் சொல் பேச்சை கேட்டு  நடங்கள். அவர்கள் உங்களை நல்வழிப்படுத்துவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : women ,
× RELATED தாயுடன் தூங்கிய 6 மாத பெண் குழந்தை கடத்தல்: 24 மணி நேரத்தில் 2 பெண்கள் கைது