25 வாரியங்களுக்கு தலைவர் பதவி

புதுச்சேரி, ஜன. 21: காங்கிரஸ், திமுகவை சேர்ந்த 25 பேருக்கு வாரிய தலைவர் பதவி வழங்குவதற்கான கோப்பு  கவர்னர் கிரண்பேடியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளது. புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், கட்சிக்கு உழைத்தவர்களை அங்கீகரிக்கும் விதமாக வாரிய தலைவர் பதவிகளை வழங்குவோம் என கட்சி தலைமை தெரிவித்தது. அதன்படி ஆட்சியை பிடித்த காங்கிரஸ்  கூட்டணி கட்சியான திமுக மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு 7 வாரிய தலைவர் பதவிகளை வழங்கியது. திமுகவை சேர்ந்த சிவா (பிப்டிக்) கீதா ஆனந்தன் (மின்திறல் குழுமம்), காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஜயவேணி( வடிசாராய ஆலை), எம்என்ஆர் பாலன் (சுற்றுலா) தனவேலு (பாப்ஸ்கோ), தீப்பாய்ந்தான் (குடிசை மாற்று வாரியம்), ஜெயமூர்த்தி (நகர அமைப்பு குழுமம்) ஆகியவை ஒதுக்கப்பட்டது. தற்போது எம்என்ஆர் பாலன் துணை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டதால், சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சேர்மன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனை மற்றொரு காங்கிரஸ் எம்எல்ஏ தற்போது கேட்டு வருகிறார். அதேபோல் மற்றொரு எம்எல்ஏவான தீப்பாய்ந்தான் தனக்கு பாப்ஸ்கோ சேர்மன் பதவியை வழங்குமாறு தொடர்ந்து அரசை வலியுறுத்தி வருகிறார். கட்சியின் மூத்த நிர்வாகிகளும் வாரிய தலைவர் பதவி எப்போது?  கிடைக்கும் என நீண்ட நாட்களாக காத்திருக்கின்றனர். காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்று மூன்றரை ஆண்டுகளை கடந்துவிட்ட போதிலும், இதுவரை கிடைக்காததால், அதிருப்திக்கு உள்ளான காங்., நிர்வாகிகள்  தங்களது எதிர்ப்பினை  பல்வேறு வகையில் தொடர்ந்து பதிவு செய்தனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் ஓட்டலில் தங்கியிருந்த  அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுசெயலாளர் முகுல் வாஸ்னிக், செயாலாளர் சஞ்சய் தத் ஆகியோரை நேரடியாக சந்தித்து, கட்சிக்கு உழைத்தவர்களுக்கு வாரிய தலைவர் பதவியை தர கட்சி தலைமை அனுமதி கொடுக்க மறுப்பது ஏன்? என சரமாரியாக கேள்வி எழுப்பினர். அவர்களை சமாதானம் செய்த  மேலிடப்பொறுப்பாளர்கள், இதனை கட்சி தலைவர் சோனியாகாந்தி கவனத்துக்கு உடனே கொண்டு செல்வதாக தெரிவித்தனர். தொடர்ந்து அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல்வாஸ்னிக்,  வாரிய தலைவர்களுக்கன பெயர் பட்டியலை அனுப்பி வைக்குமாறு முதல்வர் நாராயணசாமி கட்சி தலைவர் நமச்சிவாயம் ஆகியோருக்கு அறிவுறுத்தினர். தொடர்ந்து 25 வாரியங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட கட்சி நிர்வாகிகள் பெயர், மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள 42 கமிட்டி உறுப்பினர்களுக்கன நியமன பெயர்களை குறிப்பிட்டு, பட்டியலை அனுப்பி வைத்தனர். இதனை பரிசீலித்த சோனியாகாந்தி, சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் கட்சியில் என்ன பொறுப்பு? எவ்வளவு நாட்களாக இருக்கிறார்கள், என்பது உள்ளிட்ட விபரங்களையும் இணைக்குமாறு தெரிவித்தார். தொடர்ந்து அதற்கான தகவல்கள்  இணைத்து மாநில காங்கிரஸ் தலைமை அனுப்பி பட்டியலை மீண்டும் அனுப்பி வைத்தது. இதையடுத்து இதற்கு சோனியாகாந்தி தற்போது ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த பட்டியலில் காங்கிரஸ் கட்சியின் முன்னணி நிர்வாகிகள், கூட்டணி கட்சியான திமுக எம்எல்ஏ ஒருவரது பெயரும், திமுகவை சேர்ந்த மூத்த நிர்வாகிகள் பெயர்களும் பட்டியலில் இடம்பெற்றிருப்பதாக தெரிகிறது.  மேலும்  ஒரு  வாரியத்தை இருவரும் கேட்பது உள்ளிட்ட பிரச்னைகள் களையப்பட்டு, இறுதி வடிவத்துக்கு தற்போது வந்திருக்கிறது. இந்த பட்டியல் விரைவில் கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளது. ஏற்கனவே இப்பிரச்னை உள்துறையின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கும் பச்சைக்கொடி காட்டிவிட்டதாக தெரிகிறது. எனவே கவர்னர் இதற்கான ஒப்புதலை வழங்குவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Tags : Chairperson ,Boards ,
× RELATED ஏனாமில் 13 ஆயிரம் மக்களை வெளியேற்ற கவர்னர் உத்தரவு