×

மாவட்டம் முழுவதும் 1,47,869 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

தர்மபுரி, ஜன.20: தர்மபுரி மாவட்டத்தில் 984 முகாம்கள் மூலம், ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 869 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து நேற்று வழங்கப்பட்டது.  தர்மபுரி மாவட்டத்தில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து நேற்று வழங்கப்பட்டது. முகாமில் 1,47,869 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது. இப்பணிக்காக கிராமப்பகுதியில் 964 முகாம்களும், நகராட்சி பகுதியில் 20 முகாம்கள் என 984 முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. சொட்டு மருந்து வழங்கும் பணியில்  சுகாதாரத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், சத்துணைவு துறை, பள்ளிக்கல்வித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, வருவாய்த் துறை, ரோட்டரி சங்கம், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் தன்னார்வலர்கள் என 4083 பணியாளர்கள் ஈடுபட்டனர்.

இதேபோல், மக்கள் கூடும் இடங்களான பஸ் நிலையம், ரயில் நிலையம், சந்தைகள், சினிமா அரங்குகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் சுங்கச்சாவடி போன்ற இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தது. சமுதாயத்தில் பின் தங்கிய மக்களான நாடோடிகள், நரிக்குறவர்கள், கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகள் மற்றும் போக்குவரத்து வசதி இல்லாத மலை கிராம குழந்தைகள் பயன்பெறும் வகையில் 18 நடமாடும் மருத்துவக்குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தது. போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகளுக்காக சுகாதாரத்துறை மற்றும் பிற துறை சார்ந்த 66 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. கடந்த ஆண்டு போலியோ சொட்டு மருந்து முகாமில் 1,66,528 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு எண்ணிக்கை கடந்தாண்டை விட குறைந்துள்ளது.

காரிமங்கலம் தாலுகா கெரகோடஅள்ளி கிராமத்தில், போலியோ சொட்டு மருந்து முகாமை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் துவக்கி வைத்தார். கலெக்டர் மலர்விழி தலைமை வகித்தார். இதேபோல், தர்மபுரி எம்எல்ஏ தடங்கம் சுப்ரமணி, தடங்கம் கிராமத்தில் உள்ள துணை சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கினார். இலக்கியம்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் நடந்த முகாமில், பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி போலியோ சொட்டு மருந்து வழங்கினார். இந்த முகாமில், நூலஅள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் பாலவெங்கடேஷ், உஷாநந்தினி, ஸ்ரீ கிருஷ்ணா, கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, செந்தில் கலந்து கொண்டனர். தர்மபுரி புறநகர் பஸ் ஸ்டாண்டில் நடந்த முகாமில், மாவட்ட கலெக்டர் மலர்விழி போலியோ சொட்டு மருந்து வழங்கினார். மிட்டவுன் ரோட்டரி தலைவர் சத்தியமூர்த்தி, செயலாளர் பிரபு, முன்னாள் தலைவர் கோவிந்தராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : children ,district ,
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...