நல்லம்பள்ளி நெடுஞ்சாலையில் பல மாதங்களாக எரியாத சென்டர் மீடியன் விளக்குகள்

தர்மபுரி, ஜன.20: தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராஜவீரப்பன் கூறியதாவது: தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, பென்னாகரம், அரூர், பாலக்கோடு, மொரப்பூர் என 5 தாலுகாக்கள் மட்டுமே இருந்தன. நிர்வாக வசதிக்காக கடந்த ஓராண்டுக்கு முன்பு நல்லம்பள்ளி மற்றும் காரிமங்கலம் ஆகிய 2 தாலுகாக்கள் புதிதாக உருவாக்கப்பட்டன. சேலம் பைபாஸ் சாலையில் தர்மபுரி நகரை ஒட்டியபடி உள்ள நல்லம்பள்ளி வளர்ந்து வரும் நகராகும். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு நல்லம்பள்ளியில் இருந்து சேஷம்பட்டி வரை சாலையின் நடுவே சென்டர் மீடியனில் சுமார் ஒரு கிலோ மீட்டருக்கு மின்விளக்குகள் அமைக்கப்பட்டது. பல மாதங்களாக இந்த மின்விளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் சேலம் பைபாஸ் சாலையில் இருந்து கிராமப்புறங்களுக்கு செல்லும் குடிப்பட்டி, டாட்டா நகர், லளிகம் போன்ற சந்திப்புகள் இருளில் மூழ்கியுள்ளன. மின்விளக்கு எரியாததால் கிராமப்புறங்களில் இருந்து வரும் வாகனங்கள் மெயின் ரோட்டிற்குள் செல்வதற்குள் தடுமாறும் நிலை உள்ளது. எனவே, உடனடியாக நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஒதுக்கப்பட்ட நிதியை உடனடியாக மின்விளக்கிற்கு ஒதுக்கி விளக்குகளை எரிய செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
× RELATED 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு...