ஒகேனக்கல்லில் 4 மாதமாக பூட்டிக்கிடக்கும் தொங்கும் பாலம்

தர்மபுரி, ஜன.20:  தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் கடந்த 4 மாதமாக தொங்கும் பாலம் பூட்டிக்கிடப்பதோடு அருவிக்கு செல்லும் பாதை சீரமைக்கப்படாமல் இருப்பது சுற்றுலா பயணிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்று தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியாகும். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா மற்றும் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுமார் 50 ஆயிரம் பேரும், பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறை காலங்களில் லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க வண்ண மீன் கண்காட்சியகம், முதலைப்பண்ணை, சிறுவர் பூங்கா மற்றும் குளித்து மகிழ சினிபால்ஸ், பிரதான அருவி, பரிசல் பயணம் என பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட சுற்றுலாத்தலம் என்பதால் ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், நடப்பு சீசனில் பருவமழையின் போது ஒகேனக்கல் காவிரியில் விநாடிக்கு 2 லட்சம் கனஅடிக்கும் அதிகமாக நீர்வரத்து காணப்பட்டது. இதனால், வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றின் இருகரையையும் தொட்டவாறு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தண்ணீர் பெருக்கெடுத்ததால் அருவிக்கு செல்லும் நடைபாதை, தடுப்பு கம்பிகள், குளிக்குமிடம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தடுப்பு கம்பிகள், மின் கம்பம் ஆகியவை கடும் சேதமடைந்தது. இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் பரிசலில் செல்லவும், குளிக்கவும் தடை விதித்தது. தொடர்ந்து வெள்ளம் வடிந்ததும் பரிசலில் செல்லவும், குளிக்கவும் அனுமதியளிக்கப்பட்டது. ஆனால், நடைபாதையில் ஏற்பட்ட சேதங்கள் கடந்த 4 மாதங்களாகியும் இதுவரை சீரமைக்கப்படவில்லை. தடுப்பு கம்பிகள் பழுது நீக்கப்படாமல் உள்ளது. கூட்டம் அதிகமாக உள்ள சமயங்களில் பள்ளங்களை கவனிக்காமல் செல்வதால், சுற்றுலா பயணிகள் தடுமாறி விழுந்து எழுந்து செல்லும் நிலை காணப்படுகிறது.

இதேபோல், கடந்த 4 மாதத்திற்கு முன்பு தொங்கும் பாலம் வழியாக சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்து இழுத்து மூடப்பட்டது. தொடர்ந்து தடை நீக்கப்படாததால் சுற்றுலா பயணிகள் தொங்கு பாலத்தில் நின்றவாறு அருவியை பார்த்து ரசிக்க முடியாமல் தினமும் ஏமாற்றத்துடன் திரும்பும் நில காணப்படுகிறது. பொங்கல் விடுமுறையின் இறுதி நாள் மற்றும் வார விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ஆனால், தொங்கு பாலத்தின் வழியாக செல்ல அங்குள்ள ஊழியர்கள் கர்நாடகாவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு அனுமதித்துள்ளனர். இதுகுறித்து அறிந்த மற்ற சுற்றுலா பயணிகள் தொங்கும் பாலம் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டாவில் இருந்து சுற்றுலா வந்திருந்த முருகன் என்பவர் கூறுகையில், தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் இருந்து ஏராளமான பயணிகள் ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து ஒகேனக்கல் வந்து செல்கின்றனர். ஆனால், தொங்கும் பாலத்தை ரசிக்க அனுமதி தருவதில்லை. ஒருசிலரை மட்டும் இங்குள்ள ஊழியர்கள் அனுமதிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஏராளமான பணம் செலவு செய்து இங்கு வந்து தொங்கும் பாலத்தை ரசிக்க முடியாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். அதே வேளையில், நடைபாதை முழுவதும் சேதமடைந்துள்ளது. மெயின் அருவியில் ஆண், பெண்கள் குளிக்கும் படிக்கட்டின் அருகே மின்கம்பம் மின்வயருடன் ஆபத்தான நிலையில் சாய்ந்து கிடக்கிறது. எனவே, இதுபோன்ற குறைகளை சரிசெய்து சுற்றுலா பயணிகளை கவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

காட்சி பொருளான தானியங்கி குடிநீர் கருவி
கடந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழாவின்போது சுமார் ₹5 லட்சம் மதிப்பில் பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம் சார்பில் தானியங்கி கட்டண சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கருவி திறக்கப்பட்டது. ஒரு ரூபாய் நாணயத்தை செலுத்தியதும் குடிநீர் தானாக கிடைக்கும் வகையில் இந்த கருவி செயல்பட்டு வந்தது. இதனால், சுற்றுலா பயணிகள் மிகுந்த பயனடைந்து வந்தனர். ஆனால், கடந்த ஒரு மாதமாக இந்த கருவி பழுதடைந்த நிலையில் உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், சுற்றுலா தலமான ஒகேனக்கல்லுக்கு வரும் பயணிகளுக்கு குறைந்த விலையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்க மாவட்ட நிர்வாகமும், பென்னாகரம் ஊராட்சி ஒன்றியமும் இணைந்து ஆட்டோமேடிக் ஆர்ஓ கருவியை நிறுவியது. இதன்மூலம் குறைந்த விலையில் குடிநீர் வழங்கியதை பிடிக்காத சில சமூக விரோதிகள் கருவியை பழுதாக்கிவிட்டனர். எனவே, இந்த குடிநீர் கருவி பழுதை நீக்கி ஒகேனக்கல் காவல் நிலையம் அருகிலோ அல்லது தீயணைப்பு நிலையம் அருகிலோ அமைத்தால் பாதுகாப்பாக இருப்பதோடு குறைவான விலையில் ஒகேனக்கல் குடிநீர் அனைவருக்கும் கிடைக்கும் என கூறினர்.

Tags :
× RELATED சிந்தல்பாடி ரயில்வே பாலத்தில் விபத்தை தடுக்க வேகத்தடை அமைப்பு