தர்மபுரி மாவட்ட மக்களுக்கு தினமும் ஒகேனக்கல் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்

தர்மபுரி, ஜன.20: தர்மபுரி மாவட்டம் முழுவதும் தினமும் ஒகேனக்கல் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டுமென விவசாய தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க தர்மபுரி மாவட்ட செயலாளர் பிரதாபன் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்டத்தில் குடிக்கும் குடிநீரில் புளோரைடு பாதிப்பு காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டத்தின் விளைவாக அரசு பல ஆண்டுகளாக திட்டமிட்டு கடந்த 7 வருடங்களாக ஒகேனக்கல் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.   பொங்கல் பண்டிகையின்போது கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் ஒகேனக்கல் குடிநீர் சரியாக கிடைக்கவில்லை.

ஆக மொத்தம் மாவட்டத்தில் குடிநீர் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பென்னாகரம் தாலுக்கா பிக்கிலி ஊராட்சியில் ஒகேனக்கல் குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் நல்லம்பள்ளி அருகே இலளிகம் ஊராட்சிக்குட்பட நான்கு ஊராட்சிகளில் ஒகேனக்கல் குடிநீர் பொங்கல் திருவிழாவின்போது வரவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய கவனம் செலுத்தி தர்மபுரி மாவட்டம் முழுவதும் தட்டுப்பாடின்றி ஒகேனக்கல் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags : Dharmapuri district ,
× RELATED 3 மாதமாக காவிரி குடிநீர் நிறுத்தம் அவதிப்படும் மக்கள்