நிழற்குடை, கழிப்பிட வசதியின்றி பயணிகள் பரிதவிப்பு

மதுரை, ஜன. 20: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.160 கோடி மதிப்பீட்டிலான மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் மறுசீரமைப்பு பணிகள் தொடங்கி நேற்றுடன் ஓராண்டு முடிந்தும், எதிர்பார்த்த அளவை எட்டிக்கூட பார்க்காமல் கைவிரித்த நிலையில் உள்ளது. 30 சதவீதம் கூட பணிகள் முடிக்கப்படாத நிலையில் பயணிகள் கடும் அவதியை அனுபவிக்க வேண்டிய நிலை நீடிக்கிறது.மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் ரூ.160 கோடியில் மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் மறுசீரமைப்பு பணி கடந்த 2019 ஜனவரி 19ம் தேதி பூமிபூஜையுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து, பெரியார் பஸ் ஸ்டாண்ட் மூடப்பட்டு. நகர பஸ்கள் அனைத்தும் சுற்றிலும் நடுரோட்டில் நிறுத்தப்படுகின்றன. மறுசீரமைப்பு பணிகள் 18 மாதங்களில் முடிக்கப்பட்டு, புதிய தோற்றத்துடன் பஸ் ஸ்டாண்ட் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. நேற்றுடன் ஓராண்டு முடிந்தது. ஆனால் இன்னும் 30 சதவீதம் கூட பணிகள் முடிக்கப்படவில்லை. பெரியார், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்ட் இருந்த பகுதிகளில் தோண்டி, தூண்கள் மட்டும் வானத்தை நோக்கி எழும்பி நிற்கின்றன. நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் அதாவது இன்னும் 6 மாதத்தில் முடிவடைய வாய்ப்பே இல்லை. ஆமைவேகத்தில் பணிகள் நகர்வதால், எப்போது பணிகள் முடிவடையும்? என்பது பெரிய கேள்விக்குறியாக நீடிக்கிறது. பஸ் ஸ்டாண்ட் ஓராண்டாக மூடிக்கிடப்பதால் வெயில், மழைக்கு ஒதுங்கி நிற்கவும், மேலும் எந்த ஊர் பஸ் எங்கு நிற்கிறது? என்று தேடுவதிலும், அத்தியாவசிய தேவையான கழிப்பிட வசதியில்லாததால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகிறார்கள்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டால், “விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று மழுப்பலான பதிலை சொல்கிறார்கள்.சமூக ஆர்வலர்கள் கூறும்போது, “பணிகள் தொடங்கி ஓராண்டாகியும் 30 சதவீத பணிகள் கூட முடிக்கப்படவில்லை என்பது வேதனைக்குரியது. இதேநிலை நீடித்தால், 100 சதவீத பணிகள் முடிய இன்னும் 2 ஆண்டுகளாகும். பயணிகளின் அனுபவிக்கும் வேதனையை மாநகராட்சி அதிகாரிகள் உணரவில்லை. கட்டபொம்மன் சிலைக்கும், திடீர்நகருக்கும் இடையே மேம்பாலம் கட்டப்படாத நிலையில் பஸ் ஸ்டாண்ட் மறுசீரமைப்பு பணிகள் முடிந்தாலும் போக்குவரத்து நெருக்கடி அதிகரிக்கவே வாய்ப்புள்ளது. ஏனென்றால் டவுண்ஹால் ரோடு, நேதாஜி ரோடு, மேலமாசி வீதிகளில் தற்போது நிறுத்தப்படும் டூவீலர் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும், பெரியார் பஸ் ஸ்டாண்ட்டில் கட்டப்படும் நவீன வாகன நிறுத்துமிடத்திற்கு மாற்றப்படும்போது அந்த வாகனங்கள் வந்து செல்வதில் இடியாப்ப சிக்கல் ஏற்படும்.  

Tags : Travelers ,facilities ,
× RELATED பாப்பிரெட்டிப்பட்டி அருகே பயணிகள் நிழற்கூடம் அமைக்க கோரிக்கை