×

நீர்வரத்தின்றி வறண்ட இலளிகம் ஏரி

தர்மபுரி, ஜன.19: தர்மபுரி மாவட்டத்தில் மழை பெய்தும் நீர்வரத்தின்றி இலளிகம் ஏரி வறண்டு கிடப்பதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் இலளிகம் ஏரிக்கு மழைக்காலங்களில் கோம்பை ஏரியில் இருந்து நீர்வரத்து இருக்கும். கடந்த பல ஆண்டுகளாக இலளிகம் ஏரிக்கு நீர்வரத்து குறைந்துகொண்டே வந்து, கடந்த சில ஆண்டுகளாக இலளிகம் ஏரிக்கு நீர்வரத்து முற்றிலும் நின்றுவிட்டது. இதனால் இலளிகம் ஏரியை நம்பி பாசனம் செய்யும், சுமார் ஆயிரம் ஏக்கர் விவசாயிகள் கடும் வறட்சியின் பிடியில் சிக்கி தவிக்கின்றனர். நடப்பாண்டில் தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்தில் நல்ல மழை பெய்திருந்த போதும், இலளிகம் ஏரிக்கு நீர்வரத்து இல்லை. கோவிலூர் ஏரி, அதியமான்கோட்டை, ஏரி, ஜெட்டிஅள்ளி ஏரி, தடங்கம் ஏரி என பல ஏரிகள் நிரம்பிய போதும் இலளிகம் ஏரிக்கு நீர்வரத்து இன்றி வறண்டு கிடப்பதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

 இது குறித்து இலளிகம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பிரதாபன் கூறுகையில், நடப்பாண்டில் நல்லம்பள்ளி ஒன்றியத்தில் கனமழை பெய்தது. ஆனாலும் பெய்த கனமழைக்கு இலளிகம் ஏரிக்கு மழை நீர்வரத்து வரவில்லை. அப்பனஅள்ளி கோம்பைக்கு மேல் உள்ள குப்பாகவுண்டர் ஊற்று மழை நீர் மாமரத்துப்பள்ளம் செல்கிறது. எனவே இலளிகம் ஏரிக்கு வரவேண்டிய நீர் திசைமாறி செல்கிறது. எனவே வனத்துறைக்கு சொந்தமான குப்பாகவுண்டர் ஊற்று நீர் வரும் இடம் அருகே, 200 அடி நீளத்திற்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும். அப்போது தான் மழை நீர் இலளிகம் ஏரிக்கு வரும். இனிவரும் காலங்களிலாவது, இலளிகம் ஏரிக்கு நீர்வருமாறு செய்து இந்த பகுதி விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்றனர்.


Tags : lake ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு