அனகாபுத்தூர் தொடங்கி பட்டினப்பாக்கம் வரை அடையாறு ஆற்றில் தொழிற்சாலை கழிவுநீர் கலப்பு: கண்டுகொள்ளாத அதிகாரிகள்

பல்லாவரம்: பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் பகுதி அடையாறு ஆற்றில், பல ஆண்டுகளாக சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளின் கழிவுநீர் கலப்பதால் நீர் மாசடைந்து கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. சென்னையில் உள்ள மூன்று மிக முக்கியமான ஆறுகளில் அடையாறு ஆறும் ஒன்று. செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனூரில் தொடங்கும் இந்த அடையாறு ஆறு மணிமங்கலம், திருமுடிவாக்கம், அனகாபுத்துார் வழியாக 42.5 கிலோ மீட்டர் தூரம் பயணித்து, சென்னையில் உள்ள பல்வேறு முக்கிய பகுதிகளை கடந்து, பட்டினப்பாக்கம் கடலில் முடிவடைகிறது. மழைக்காலங்களில் கூடுவாஞ்சேரி, ஆதனூர் மற்றும் படப்பை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் 34 ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரிநீர் இந்த அடையாறு ஆற்றில் கலக்கிறது. ஒரு காலத்தில் காஞ்சிபுரம் மற்றும் சென்னை புறநகர் பகுதி மக்களின் மிகப்பெரிய நீர ஆதாராதமாகவும், விவசாயம் மற்றும் மீன்பிடி தொழில் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு அடையாறு ஆறு பயன்பெற்று வந்தது.

இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த இந்த அடையாறு ஆறு, அரசின் தொடர் அலட்சியத்தால் கழிவுநீர் கலந்து கழிவுநீர் கால்வாயாக மாறியுள்ளது. இதனால், நிலத்தடி நீர் மாசு மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, சுற்றுப்புற பகுதி மக்களுக்கு நோய்கள் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்தாண்டு இறுதியில் பெய்த பருவ மழையால், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏரி மற்றும் குளங்களின் நீர் மட்டம் உயர்ந்தது. இதன் காரணமாக அடையாறு ஆற்றில் சுத்தமான நீர் கரைபுரண்டு ஓடுகிறது. அவ்வாறு செல்லும் நீரை தடுத்து, அதனை சுத்தப்படுத்தி, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் போதிய தடுப்பணைகள் அமைத்து, நீரை தேக்கி வைக்க அரசு முன் வராத காரணத்தால், தற்போது அடையாறு ஆற்றில் பாய்ந்து ஓடும் தண்ணீர் அனைத்தும் வீணாக கடலில் சென்று கலந்து வருகிறது. இந்நிலையில், அனகாபுத்தூர் தொடங்கி பட்டினப்பாக்கம் வரை அடையாறு ஆற்றங்கரை பகுதிகயில் அமைந்துள்ள தொழிற்சாலைகளின் கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் விதிமீறி இந்த அடையாறு ஆற்றில் விடப்படுகிறது. பல ஆண்டுகளாக இவ்வாறு கழிவுநீர் கலப்பதால் அடையாறு ஆறு சாக்கடையாக மாறி வருகிறது. ஆனால், இதனை தடுக்க வேண்டிய அதிகாரிகள், சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், மெத்தனமாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘அடையாறு ஆற்றங்கரையில் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஒரு பக்கம் அரசு கண் துடைப்பிற்காக ஆக்கிரமிப்புகளை அகற்றினாலும் கூட, இந்த பணிகள் அனைத்தும் மந்த கதியில் நடைபெற்று வருகிறது. இதனால், ஆக்கிரமிப்பு பெருகி வருகிறது. இதனால் அடையாறு ஆறு தனது வழக்கமான பரப்பளவில் இருந்து சுருங்கி கொண்டே செல்கிறது. மேலும், தெழிற்சாலைகளின் கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக அடையாறு ஆற்றில் விடப்படுவதால், சாக்கடை போல் மாறி வருகிறது. ஆனால், சம்பந்தப்பட்ட தொழிற்சாலை முதலாளிகள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல், அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். எனவே, அரசு உயர் அதிகாரிகள் இதுகுறித்து நேரில் ஆய்வு செய்து, அடையாறு ஆற்றில் கழிவுநீர் விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதன் மூலம் ஆற்று நீர் மாசுபடுவது தவிர்க்கப்படுவதுடன், நீர் வளமும் காக்கப்படும். இனி வரும் கோடை காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் தண்ணீருக்காக இரவு பகல் பாராது குடத்தை தூக்கிக் கொண்டு சாலையில் திரியும் நிலை ஏற்படாது. நாம் மட்டுமின்றி, நமது வருங்கால சந்ததியினரும் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்னை ஏற்படாமல் வாழ வழிவகை செய்ய முடியும்,’’ என்றனர்.

Tags : river ,Pattinapakkam ,Anakaputhur ,
× RELATED சிறுகமணி காவிரி ஆற்றிலிருந்து