×

அலைக்கழிக்கும் ரேஷன் கடைகளுக்கு பூட்டு முஸ்லீம் யூத் லீக் முடிவு

கம்பம், டிச. 13: கம்பம் நாட்டுக்கல், கம்பம்மெட்டு காலனி பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் முறைகேடு நடப்பதாலும், பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்காமல் அலைக்கழிப்பதாலும் இந்த கடைகளுக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்த முஸ்லீம் யூத்லீக் முடிவு செய்துள்ளனர். கம்பத்தில் கம்பம் 108 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் ஏழு கடைகளும், உத்தமபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் ஆறு கடைகளும், கம்பம் ஸ்டோர்க்கு உட்பட்ட ஆறு கடைகள் மகளிர் கடை என இருபத்தியோரு கடைகள் உள்ளன. இதில் கம்பம் நாட்டுக்கல் பகுதியிலுள்ள 1 மற்றும் 7ம் எண் கடையிலும், கம்பம்மெட்டு காலனியில் உள்ள 4ம் நம்பர் ரேஷன் கடையில் முறையாக சீனி, பாமாயில் சப்ளை செய்வதில்லை என்றும், ரேஷன் பொருட்களுடன் மற்றபொருள் வாங்க பொதுமக்களை கட்டாயப்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டும் சோப்பு, உப்பு வாங்க கடைக்காரர் கட்டாயப்படுத்துகின்றனர்.

மேலும் முறைவைத்து பொருட்கள் வழங்காததால் கடையில் கூட்டம் அதிகமாகிறது. அதிகாரிகளிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்காமல் அலைக்கழிக்கும் இந்த ரேசன் கடைகளுக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்த முஸ்லீம் யூத்லீக் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து முஸ்லீம் யூத்லீக் மாநில செயலாளர் முகமதுசாதிக் கூறுகையில், ``இந்த ரேஷன் கடைகளில் மக்களுக்கு பொருட்கள் சரியாக விநியோகம் செய்வதில்லை. பொதுமக்களை ரேஷன் கடைகளில் நீண்ட நேரம் நிற்கவைத்து சிலருக்கு மட்டுமே பொருட்களை வழங்கி விட்டு, பொருட்கள் இல்லை இரண்டு நாட்கள் கழித்து வாருங்கள் என்று திருப்பி அனுப்பி விடுகின்றனர். இரண்டு நாள் கழித்துச் சென்றால் அப்பவும் கொடுப்பதில்லை. மேலும் கம்பம்மெட்டு காலனியில் உள்ள 4ம்நம்பர் கடையில் சரக்கு சப்ளையின் போது கடைக்கு சம்பந்தமே இல்லாத சிலர் வந்து கடையினுள் இருந்து கொண்டு, கடைக்குவரும் பெண்களிடம் ஏகடியம் பேசுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனே இதை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்ந்தால் பொது மக்களை ஒன்று திரட்டி குறிப்பிட்ட இந்த ரேஷன் கடைகளுக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்துவோம்’’ என்றார்.

Tags : ration shops ,Lock Muslim Youth League ,
× RELATED ரேஷன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு