×

முத்துப்பேட்டை அருகே அடிப்படை வசதிக்காக பல ஆண்டுகளாக தவிக்கும் மக்கள்

முத்துப்பேட்டை, டிச.10:முத்துப்பேட்டை அருகே அடிப்படை வசதிகள் இன்று பலஆண்டுகளாக தவித்து வரும் மக்கள் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி தமிழக முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளனர். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் ஊராட்சி ஒன்றியத்தில் பெரிய ஊராட்சிகளில் ஒன்றாகும். இந்த ஊராட்சியில் உள்ள ஆதிகுட்டிக்காடு கிராமத்தில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் ஒரு பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் தெருவில் 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் மீனவர்கள், விவசாயிகள், கூலித் தொழிலாளர்களாக உள்ளனர். மிகவும் பின்தங்கிய பகுதியான இங்கு ஊராட்சி சார்பில் பல ஆண்டுகளாக எந்தவித அடிப்படை வசதிகளும் முறையாக செய்து கொடுக்காததால் ஆதிதிராவிட பகுதி மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.அரசு சார்பில் கட்டிக்கொடுக்கப்பட்ட தொகுப்பு வீடுகளும் சேதமடைந்துள்ளன. பொது சுகாதார பணிகளும் கிடையாது. குறிப்பாக ஆதிகுட்டிக்காடு கிராமம் தொடங்கும் அரசு பள்ளியில் இருந்து கிளந்தாங்கி ஆறு வரை பிலாவர் ஓடை என்ற வடிகால் பல ஆண்டுக்கு முன் இருந்தது. இவ்வழியாகத்தான் இப்பகுதியில் பெய்யும் மழைநீர் மற்றும் பாசன வாய்க்காலிலிருந்து வரும் தண்ணீர் ஆகியவை இங்கிருந்து சென்று கிளந்தாங்கியாற்றில் வடியும். இந்த வாய்க்காலை நெடுவெங்கும் தனியார் ஆக்கிரமித்துள்ளனர்.

பலர் இந்த வாய்க்காலை தூர்த்து பட்டா போட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. பல இடங்களில் அதன் மேல் வீடுகளும் கட்டி உள்ளதால் இன்றைக்கு இப்பகுதியில் தேங்கும் மழைநீர் வடிய வழியின்றி குடியிருப்புகளையும் சூழ்ந்து விடுகிறது.
அதேபோல் இந்த பகுதிக்கு செல்லும் இரண்டு சாலையையும் மழைநீர் சூழ்ந்துள்ளதால் இடுப்பளவு தேங்கியிருக்கும் தண்ணீரில் நீந்துதான் செல்கின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் பெய்த மழைக்கு வழக்கம்போல் மழைநீர் தேங்கி அதே அவதியில் மக்கள் அனுபவித்து வருகின்றனர். தற்பொழுது தேங்கிய மழைநீர் கழிவுநீராக மாறியுள்ளது. இதன் மூலம் அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாகி மக்களை துன்புறுத்தி வருகிறது. இதனால் பலருக்கும் காச்சல் உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்களும் ஏற்பட்டு வருகிறது. மழை விட்டு ஒருவாரமாகியும் இன்னும் தண்ணீர் வடியவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் முடங்கி உள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனுக்கள் அனுப்பியும் யாரும் கண்டுகொள்ளவே இல்லை. தற்போது பெய்த மழையால் மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர். இப்பகுதி மக்கள் தமிழக முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு ஒரு கோரிக்கை மனுவை அனுப்பி உள்ளனர். அதில் இப்பகுதி பிரதான பிலாவர் ஓடையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளால் மழைநீர் வடிய வழியின்றி கிராமமே மூழ்கும் நிலை, அதுமட்டுமின்றி ஆதிதிராவிட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மழைநீர் வடிய வழி இல்லாததால் தாழ்வாக உள்ள சாலைகளில் மழைநீர் சூழ்ந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஆகவே வடிகால் மேல் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும், இப்பகுதி மக்களுக்கு சாலை வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் இனியும் காலதாமதம் ஏற்படுத்தி நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் விரைவில் போராட்டம் நடத்தவும் தயார் நிலையில் இருப்பதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Tags : Muthupettai ,facilities ,
× RELATED அடிப்படை வசதியுமின்றி மக்கள் அவதி...