×

சிவப்பு நிற அட்டைக்கு 20 கிலோ இலவச அரிசி வினியோகம்

புதுச்சேரி, டிச. 13: புதுச்சேரி மாநிலத்தில் குடிமைப் பொருள் வழங்கல் துறையால் வறுமைக் கோட்டுக்கு உள்ள சிவப்பு நிற ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் 20 கிலோ அரிசியும், மஞ்சள் நிற அட்டைதாரர்களுக்கு 10 கிலோ அரிசியும் அரசு வழங்க நடவடிக்கை எடுத்தது.
இதனிடையே ஏழைகளுக்கு மட்டுமே அரிசி வழங்க வேண்டும் என கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டார். அதன்படி மஞ்சள் நிற அட்டைக்கு அரிசிக்கு பதிலாக பணமும், சிவப்பு நிற அட்டைக்கு அரிசியாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதத்துக்கான அரிசி சிவப்பு நிற அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து மார்ச் மாதத்துக்கான அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, ரேஷன் கடைகளில் வினியோகம் செய்யப்பட்டது.

திடீரென காமராஜர் நகர் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானதால்  வில்லியனூர், மங்கலம் உள்ளிட்ட தொகுதிகளில் சில ரேஷன் கடைகளில் அரிசி வினியோகம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் 72 ரேஷன் கடைகளில் விடுபட்ட பயனாளிகளுக்கு மார்ச் மாதத்துக்கான அரிசி நேற்று வழங்கப்பட்டது. பொதுமக்கள் ஆர்வத்துடன் 20 கிலோ இலவச அரிசியை வாங்கிச்சென்றனர். அதே நேரத்தில் மஞ்சள் நிற அட்டைக்கான மார்ச் மாத அரிசி வழங்கப்படவில்லை. அதற்கான பணமும் வங்கிக்கணக்கில் செலுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
× RELATED தூத்துக்குடியில் இடிந்து விழுந்த...