சிட்கோ அமைக்க எதிர்ப்பு குஜிலியம்பாறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

குஜிலியம்பாறை, டிச. 11: ஆர்.கோம்பையில் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து குஜிலியம்பாறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குஜிலியம்பாறை தாலுகா, ஆர்.கோம்பை ஊராட்சி ஆணைக்கவுண்டன்பட்டி அருகே சீலக்கரடு வனப்பகுதியில் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புளியம்பட்டியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் ராஜரத்தினம் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்வராஜ் விளக்கவுரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு சார்பில், கடந்த 2016ம் ஆண்டு சிட்கோ தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்த போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் அப்போதே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. காரணம் சீலக்கரடு மலைகள் சார்ந்த வனப்பகுதியாகும். இங்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள், விலங்குகள் மற்றும் மயில்கள் உள்ளிட்ட ஏராளமான பறவைகள் தங்கும் இடமாக உள்ளது.

அதுமட்டுமன்றி மிகவும் தொன்மையான கருப்பணசாமி, கன்னிமார் பெண் தெய்வம் ஆகிய கோயில்கள் இருப்பதால் வனப்பகுதியை அழிக்க வேண்டாம் என தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வனப்பகுதியை அழிக்காமல், வேறு இடத்தில் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாய்மொழி உத்திரவாதம் அளித்தனர். ஆனால் தற்போது அதற்கான வேலைகளை துவக்கி சீலக்கரடு வனப்பகுதியை அழிப்பது என்ற முடிவுக்கு அரசு வந்துள்ளது தெரியவருகிறது. சீலக்கரடு மலைப்பகுதியை சமப்படுத்த மட்டும் ரூ.12 கோடி ஒதுக்கியுள்ளதாக தெரிகிறது. ஆளுந்தரப்பினர் சம்பாதிப்பதற்காக வனத்தையும், பறவைகள் தங்கும் இடத்தையும் அழித்து எடுக்கவுள்ள இச்செயலை கண்டித்தும், பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத இடத்தில் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியன், தங்கவேல், ஜெயபால், சண்முகவேல், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Marxist Communist Demonstration ,
× RELATED மதுராந்தகத்தில் குடிநீர் பிரச்னையை...